மேற்கத்திய நாடுகளின் வாழ்க்கை முறை, கலாச்சாரம் ஆகியவை தங்கள் நாட்டில் புகுந்துவிடாதபடி தொடர்ந்து கட்டுப்பாடுகளை விதித்து வரும் வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன், இப்போது புதிய உத்தரவை பிறப்பித்துள்ளார்.
அதன்படி, மேற்கத்திய நாடுகளில் பயன்படும் சில ஆங்கிலச் சொற்களை இனி வடகொரியர்கள் பயன்படுத்தக் கூடாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. சுற்றுலாத் தலங்களில் பணியாற்றும் வழிகாட்டிகள் உட்பட பொதுமக்கள் அனைவருக்கும் இந்த உத்தரவு பொருந்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தடைசெய்யப்பட்ட சொற்களில் ஹாம்பர்கர், ஐஸ்கிரிம், கரோக்கி போன்றவை அடங்கும். இவற்றுக்குப் பதிலாக அரசால் அங்கீகரிக்கப்பட்ட மாற்றுச் சொற்களைப் பயன்படுத்த வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது. உதாரணமாக, “ஐஸ்கிரிம்” என்பதற்கு பதிலாக “எஸ்கிமோ” என்றும், “ஹாம்பர்கர்” என்பதற்கு “இரண்டு அடுக்கு இறைச்சி துண்டுடன் ரொட்டி” என்றும் பயன்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதற்கான நடைமுறைகளை எளிதாக அமல்படுத்துவதற்காக, வடகொரியாவில் சுற்றுலா வழிகாட்டிகளுக்கான சிறப்பு பயிற்சி வகுப்புகள் தொடங்கப்பட்டுள்ளன. மூன்று மாதங்கள் நடைபெற உள்ள இந்த வகுப்புகளில், எவ்வாறு மேற்கத்திய சொற்களை தவிர்த்து உள்நாட்டு சொற்களையே பயன்படுத்த வேண்டும் என்பதை விரிவாக கற்பிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
வடகொரியாவில் வெளிநாட்டு தொடர்கள் பார்ப்பதற்கு தடை, மேற்கத்திய உடைகள் அணியத் தடை, ஆண்களின் தலைமுடி அலங்காரத்துக்கே கூட அரசு கட்டுப்பாடுகள் போன்ற பல விதிமுறைகள் ஏற்கனவே அமலில் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.