காத்மாண்டு: நேபாளத்தில் சமூக ஊடகத் தடை எதிர்ப்பு போராட்டம் வன்முறையாக மாறி பரவலான உயிரிழப்புகளையும் அழிவுகளையும் ஏற்படுத்திய நிலையில், இந்திய பெண் சுற்றுலாப் பயணி ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சமூக ஊடகங்கள் வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம், பேஸ்புக் உள்ளிட்டவற்றுக்கு நேபாள அரசு விதித்த தடை காரணமாக, நூற்றுக்கணக்கான இளைஞர்கள் கடந்த செப்டம்பர் 8ஆம் தேதி தெருக்களில் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனை கலைக்க போலீசார் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் 19 பேர் பலியாகினர். இதனால் ஆத்திரமடைந்த போராட்டக்காரர்கள் அடுத்த நாள் காத்மாண்டுவில் உள்ள பார்லிமென்ட், சிங்கதர்பார் தலைமைச் செயலகம், உச்ச நீதிமன்றம், பிரதமர் மற்றும் முன்னாள் பிரதமர்களின் இல்லங்களை சூறையாடினர். மேலும், பல கட்டடங்களுக்கு தீவைத்து பெரும் சேதத்தை ஏற்படுத்தினர்.
இந்த சூழலில், ஏராளமான இந்திய சுற்றுலாப் பயணிகள் நேபாளத்தில் சிக்கிய நிலையில் மீட்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டன. அப்போது உத்தரபிரதேசம் காசியாபாத்தைச் சேர்ந்த ராம்வீர் சிங் கோலா (58), அவரது மனைவி ராஜேஷ் தேவி (55) ஆகியோர் தங்களின் குழந்தைகளுடன் செப்டம்பர் 7ஆம் தேதி காத்மாண்டுவில் பசுபதிநாத் கோவிலுக்கு சென்றிருந்தனர்.
செப்டம்பர் 9ஆம் தேதி இரவு தாங்கள் தங்கியிருந்த 5-ஸ்டார் ஹோட்டலுக்குள் போராட்டக்காரர்கள் புகுந்து தீவைத்தனர். இதையடுத்து, மீட்புக்குழுவினர் சுற்றுலாப் பயணிகளை பாதுகாப்புக்காக ஹோட்டலிலிருந்து வெளியே குதிக்குமாறு கேட்டுக்கொண்டனர். அதன்படி, 4வது மாடியில் இருந்த ராம்வீர் மற்றும் ராஜேஷ் தேவி குதித்தனர். இதில் ராம்வீர் சிறுகாயங்களுடன் தப்பினார். ஆனால், ராஜேஷ் தேவி பலத்த காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
ஆனால், சிகிச்சை பலனளிக்காமல் செப்டம்பர் 10ஆம் தேதி இரவு ராஜேஷ் தேவி உயிரிழந்தார். இந்த சம்பவம் நேபாளம் மற்றும் இந்திய சுற்றுலா பயணிகள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

















