இந்தியா மற்றும் மொரீஷியஸ் இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தகத்தை அந்தந்த நாட்டின் சொந்த கரன்சியில் மேற்கொள்வது தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.
உத்தரபிரதேசம் விஜயமாக பயணம் செய்த பிரதமர் மோடி, மொரீஷியஸ் பிரதமர் நவீன்சந்திர ராம்கூலம் உடன் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். இருதரப்பு சந்திப்பிற்குப் பிறகு, பிரதமர் மோடி செய்தியாளர்களிடம் கூறியதாவது:
“எனது லோக்சபா தொகுதியில் உங்களை வரவேற்பதில் பெருமை. பல நூற்றாண்டுகளாக, இந்தியாவின் நாகரிகம் மற்றும் கலாசாரத்தின் அடையாளமாக காசி இருந்து வருகிறது. நமது மரபுகள் மற்றும் மதிப்புகள் பல நூற்றாண்டுகளுக்கு முன்பே மொரீஷியஸை அடைந்து அதன் வாழ்க்கை முறையில் ஆழமாக வேரூன்றியுள்ளன. நமக்கும் மொரீஷியஸ் நாட்டுக்கும் உணர்ச்சிபூர்வமான பிணைப்பு உள்ளது. நம் இரு நாடுகளும் வெறும் கூட்டாளிகள் மட்டும் அல்ல, ஒரு குடும்பம்.”
பிரதமர் மோடி, மொரீஷியஸின் வளர்ச்சியில் இந்தியா நம்பகமான மற்றும் முன்னுரிமை கொண்ட பங்குதாரராக இருப்பதை பெருமையாக குறிப்பிடவும், சிறப்பு பொருளாதார தொகுப்பை வழங்கும் முடிவை எடுத்துள்ளதாக தெரிவித்தார்.
இரு நாடுகளின் ஒத்துழைப்பின் அனைத்து அம்சங்களையும் விரிவாக மதிப்பாய்வு செய்ததைப் போன்று, பிராந்திய மற்றும் உலகளாவிய பிரச்சினைகள் தொடர்பிலும் கருத்துக்களை பரிமாறிக் கொண்டனர்.
மொரீஷியஸின் இறையாண்மையை இந்தியா முழுமையாக அங்கீகரிக்கும் என்றும், இரு நாடுகளுக்கிடையிலான வர்த்தகத்தை அந்தந்த நாட்டின் கரன்சியில் மேற்கொள்வது தொடர்பாக விரைவில் முடிவெடுக்கப்படும் என்றும் பிரதமர் மோடி குறிப்பிட்டார்.