காத்மாண்டு : நேபாளத்தின் முன்னாள் தலைமை நீதிபதியும், தற்போது இடைக்கால அரசு தலைவராக பொறுப்பேற்றுள்ள சுஷிலா கார்கி, “இந்திய பிரதமர் நரேந்திர மோடி மீது எனக்கு நன்மதிப்பு உள்ளது. இந்தியாவுடன் எங்களது உறவு வலுப்படும்” என்று உறுதியளித்துள்ளார்.
நேபாளத்தில் இளைஞர்கள் முன்னெடுத்த போராட்டங்களால் பிரதமர் கே.பி. சர்மா ஒலி ராஜினாமா செய்தார். தொடர்ந்து ஜனாதிபதியும் பதவி விலகினார். ஆரம்பத்தில் சமூக ஊடக தளங்களுக்கு விதிக்கப்பட்ட தடையை எதிர்த்து துவங்கிய இந்த போராட்டங்கள், பின்னர் பரந்த ஊழல் எதிர்ப்பு இயக்கமாக மாறின. அரசியல் அமைப்பில் முழுமையான மாற்றம் தேவை என்ற கோரிக்கையும் எழுந்தது.
அரசாங்கத்தின் முக்கிய பொறுப்புகளில் இருந்தவர்கள் அனைவரும் பதவி விலகிய நிலையில், முன்னாள் தலைமை நீதிபதி சுஷிலா கார்கி இடைக்கால அரசு தலைவராக பொறுப்பேற்றார்.
இந்நிலையில் பேட்டியளித்த அவர், “இளைஞர்களின் கோரிக்கையை ஏற்று இடைக்கால அரசாங்கத்தை வழிநடத்த பொறுப்பேற்றுள்ளேன். நேபாளத்தின் சிக்கலான அரசியல் வரலாற்றை நினைவில் கொண்டு, வரவிருக்கும் சவால்களை ஏற்கிறேன். நாட்டின் வளர்ச்சிக்காக ஒன்றிணைந்து செயல்பட்டு, நேபாளத்திற்கு புதிய தொடக்கத்தை ஏற்படுத்துவோம்.
இந்தியாவின் ஆதரவுக்கு நன்றி. பிரதமர் மோடிக்கு வாழ்த்து தெரிவிக்கிறேன். இந்தியாவுடன் எங்களது உறவு இன்னும் வலுப்படும். போராட்டங்களில் உயிரிழந்த இளைஞர்களை கவுரவித்து, நேபாளத்தை மீண்டும் கட்டியெழுப்ப உறுதியாக உள்ளேன்,” என்றார்.