அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை அவரது இல்லத்தில் சந்தித்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதற்குப் பின், பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் அவசரமாக டெல்லிக்கு புறப்பட்டுள்ளார் என்பது அரசியல் வட்டாரத்தில் கவனம் ஈர்க்கிறது.
அதிமுகவில் ஒருங்கிணைப்பு தேவை என வலியுறுத்தி, 10 நாட்கள் அவகாசம் கொடுத்த செங்கோட்டையனை, கட்சிப் பொறுப்பில் இருந்து நீக்கியது எடப்பாடி பழனிசாமி. இதேசமயம், அவரது ஆதரவாளர்களின் பதவிகளும் பறிக்கப்பட்டன. இந்தச் சூழ்நிலையில் செங்கோட்டையன் டெல்லி புறப்பட்டு, அமித் ஷாவைச் சந்தித்திருப்பது, அதிமுக – பாஜக உறவுகளைச் சூடுபிடிக்க வைத்துள்ளது.
இதனிடையே, பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் நேற்று திருநெல்வேலியில் செய்தியாளர்களிடம் பேசியபோது,
“தமிழகத்தில் ஆட்சி மாற்றம் விரைவில் நிகழும். அதிமுகவில் அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தி வருகிறேன். திமுகவுக்கு மாற்றான ஆட்சி அவசியம். இதுகுறித்து டெல்லி தலைமையோடு ஆலோசனை நடத்தி முடிவெடுக்கப்படும்,” எனத் தெரிவித்துள்ளார்.
டிடிவி தினகரனின் குற்றச்சாட்டுகளுக்கு பதிலளித்த அவர்,
“2019-இல் அதிமுக – பாஜக கூட்டணியில் இருந்தது உண்மை. பின்னர் தினகரன் தனிக் கட்சி தொடங்கினார். 2021 சட்டமன்றத் தேர்தலிலும் நாங்கள் கூட்டணியாகவே போட்டியிட்டோம். பலமுறை தினகரனோடு தொலைபேசியில் பேசியிருக்கிறேன். ஆனால் திடீரென்று நான் காரணம் எனக் கூறுவது புரியவில்லை,” என்று கூறினார்.
மேலும், முதலமைச்சரின் வெளிநாட்டு பயணம், கொளத்தூர் தொகுதி வாக்கு முறைகேடு, தாமிரபரணி திட்டம் ஆகியவற்றைச் சுட்டிக்காட்டி அவர் அரசை கடுமையாக விமர்சித்தார். பசும்பொன் முத்துராமலிங்க தேவருக்கு பாரத ரத்னா வழங்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
செங்கோட்டையன் பாஜகவில் சேர வாய்ப்புள்ளதா என்ற கேள்விக்கு, “அதிமுகவுடன் கூட்டணியில் இருக்கும் இந்தநேரத்தில், அவரை அழைப்பது நாகரீகமாக இருக்காது,” எனத் தெளிவுபடுத்தினார்.
அதிமுக – பாஜக உறவுகள் குறித்து தொடர்ந்து விவாதம் நிலவி வரும் நிலையில், செங்கோட்டையனும் நயினார் நாகேந்திரனும் ஒரே நேரத்தில் டெல்லி பயணம் செய்வது, தமிழக அரசியலில் புதிய மாற்றங்களுக்கு வழிவகுக்குமா என்பது தற்போது பெரிய கேள்வியாக உள்ளது.
 
			

















