துணை குடியரசுத் தலைவர் தேர்தல் நாளை நடைபெற உள்ளது. இதில் தேசிய ஜனநாயக கூட்டணியின் (என்டிஏ) வேட்பாளராக மகாராஷ்டிரா ஆளுநரும், தமிழ்நாட்டைச் சேர்ந்தவருமான சி.பி.ராதாகிருஷ்ணன் போட்டியிடுகிறார். இந்தியா கூட்டணியின் சார்பில் உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி, தெலங்கானாவைச் சேர்ந்த பி.சுதர்சன ரெட்டியும் வேட்பாளராக உள்ளார்.
இந்த தேர்தலில் மக்களவை, மாநிலங்களவை உறுப்பினர்களுக்கே வாக்களிக்கும் உரிமை உண்டு. இதற்காக இன்று நாடாளுமன்ற வளாகத்தில் எதிர்க்கட்சி எம்.பிக்களுக்கு மாதிரி வாக்குப்பதிவு நடைப்பெற்றது. கோவை நாடாளுமன்ற உறுப்பினர் கணபதி ராஜ்குமார் இதற்காக டெல்லி பயணம் மேற்கொண்டார்.
இந்த நிலையில் செய்தியாளர்களை சந்தித்த அவர்,
“துணை குடியரசுத் தலைவர் தேர்தலில் நாங்கள் இந்தியா கூட்டணி வேட்பாளருக்கு வாக்களிக்க உள்ளோம். பாஜக வேட்பாளர் தமிழர் என்பதற்காக வாக்களிக்க முடியாது. தற்போதைய ஒன்றிய அரசு தமிழர்களுக்காக எந்தச் செயலையும் செய்யவில்லை. அலங்கார பதவிகள் வழங்குவதால் மாநிலத்திற்கு எவ்விதப் பயனும் கிடையாது.
சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு வாழ்த்துக்கள். ஆனால் அவரால் தமிழகத்திற்கு எந்தப் பிரயோஜனமும் இல்லை. கொள்கை அடிப்படையில் எங்கள் தலைவர் எடுக்கும் முடிவையே நாங்கள் பின்பற்றுவோம்” என்று தெரிவித்தார்.















