சென்னை: சாலையில் கிடந்த தங்கச் சங்கிலியை போலீசில் ஒப்படைத்த தூய்மைப்பணியாளர் கிளாராவை, முதல்வர் மு.க. ஸ்டாலின் பாராட்டியுள்ளார்.
சென்னை காசிமேடு பகுதியை சேர்ந்த கிளாரா, தூய்மைப்பணியாளராக பணியாற்றி வருகிறார். வழக்கம்போல பணியில் ஈடுபட்டிருந்த அவர், திருவான்மியூர் மருந்தீஸ்வரர் கோவில் மண்டபத்திற்கு எதிரே உள்ள கிழக்கு கடற்கரை சாலையில் தங்கச் சங்கிலி கிடப்பதை கண்டார். அதை தனது கண்காணிப்பாளரிடம் தெரிவித்த கிளாரா, பின்னர் போலீசில் ஒப்படைத்தார்.
கிளாராவின் நேர்மையை போலீசார், சக ஊழியர்கள், பொதுமக்கள் என அனைவரும் பாராட்டி வருகின்றனர்.
இதுகுறித்து முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட வாழ்த்து செய்தியில், “தூய்மைப் பணியின்போது கண்டெடுத்த தங்கச் சங்கிலியை நேர்மையோடு போலீசாரிடம் ஒப்படைத்த செய்தியை பார்த்து நெகிழ்ந்தேன். எளியவர்கள் எப்போதும் நேர்மையின் பக்கம் தான் என்பதற்கு மற்றுமொரு எடுத்துக்காட்டாக மின்னிடும் கிளாராவுக்கு எனது அன்பும் பாராட்டுகளும்,” என தெரிவித்துள்ளார்.
















