மத்திய அரசின் நலத்திட்டங்களை மக்களுக்கு சென்றடைய திமுக தடை செய்கிறது என்று தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் குற்றம் சாட்டியுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், திண்டுக்கல் பாஜ மேற்கு மாவட்ட மகளிரணி செயலாளர் பரமேஸ்வரி, சாலையோர வியாபாரிகள் மற்றும் சிறு, குறு தொழிலாளர்களுக்கு ஸ்வானிதி மற்றும் முத்ரா கடனுதவிகளை வழங்கும் வகையில் முயன்றதாக கூறினார். அப்போது, பழனி திமுக நகராட்சி தலைவர் உமா மகேஸ்வரி, அவரை தகாத வார்த்தைகளால் திட்டி, மிரட்டியதாகவும், “எந்த கவர்மெண்ட் உங்களுக்கு சம்பளம் கொடுக்கிறதோ அவர்கள் சொல்வதைக் கேளுங்கள்” என அதிகார மமதையுடன் பேசியதாகவும் நயினார் நாகேந்திரன் குற்றம் சாட்டினார்.
“மக்களுக்கு நன்மை பயக்கும் மத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்த திமுக அரசு முன்வருவதில்லை. அதை மக்களிடம் கொண்டு சேர்க்க முயற்சிப்பவர்களையும் தடுக்கிறது. இது கடும் கண்டனத்திற்குரியது. ஒருவேளை மத்திய அரசு திட்டங்கள் மக்களை சென்றடைந்தால் தங்களின் நாடக அரசியல் வெளிப்படையாகிவிடும் என்ற அச்சத்தில் திமுக அரசு செயலில் தடைகள் உருவாக்குகிறது,” என அவர் விமர்சித்தார்.
அவர் மேலும், “திமுகவின் அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக தமிழகத்தின் வளர்ச்சி பாதிக்கப்படக் கூடாது. எவ்வித அடக்குமுறையாலும், அதிகாரத் துஷ்பிரயோகத்தாலும் பாஜக மக்கள் பணியை தடுக்க முடியாது. பிரதமர் மோடியின் சிறந்த திட்டங்கள் அனைத்தும் தமிழக மக்களிடம் சென்றடைய பாஜக உறுதி செய்கிறது,” என்று தெரிவித்தார்.
















