சென்னை: 108 ஆம்புலன்ஸ் டிரைவர் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து டிஜிபி பதிலளிக்க வேண்டும் என்று மதுரை கிளை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி “மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம்” பிரசார பயணத்தை வேலூரில் மேற்கொண்டபோது, 108 ஆம்புலன்ஸ் வெறுமனே கூட்டங்களில் பங்கேற்கிறது என குற்றச்சாட்டு எழுப்பினார். இதனைத் தொடர்ந்து, ஆம்புலன்ஸ் டிரைவரை சிலர் தாக்கியதாக புகார் எழுந்தது.
இச்சம்பவத்தையடுத்து, ஆம்புலன்ஸ் பணியாளர்கள் மீது தாக்குதல் நடத்துபவர்களுக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படும் என தமிழக அரசு அறிவித்தது. மேலும், ஆம்புலன்ஸ் டிரைவர்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என கோரி வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது, நீதிபதிகள் தெரிவித்ததாவது:
ஆம்புலன்ஸ் பணியாளர்கள் மீது தாக்குதல் நடத்துவது ஏற்றுக்கொள்ள முடியாது. தாக்குதல் நடத்தினால் உடனடியாக வழக்குப்பதிவு செய்ய வேண்டும். அரசியல் கட்சி, சமூக அமைப்பு எதுவாக இருந்தாலும் ஆம்புலன்ஸுக்கு வழிவிட வேண்டும். பொதுக்கூட்டங்களில் மக்கள் அதிகமாக இருந்தாலும் ஆம்புலன்ஸ்க்கு வழி விடப்பட வேண்டும். அனைத்து 108 ஆம்புலன்ஸ் டிரைவர்களுக்கும் போலீஸ் பாதுகாப்பு வழங்குவது சாத்தியமா என்பதை பரிசீலிக்க வேண்டும். ஆம்புலன்ஸை வழிமறித்து தாக்கினால், கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
அதன்படி, சம்பந்தப்பட்ட டிஜிபி, ஆம்புலன்ஸ் டிரைவர் தாக்குதல் குறித்து எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பாக பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.














