காபூல்: ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கம் பெரும் உயிரிழப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த விபரீதத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 1,411 ஆக உயர்ந்துள்ளதாகவும், மேலும் 3,000-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகவும் அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன.
தெற்காசிய நாடான ஆப்கானிஸ்தானின் கிழக்கு பகுதி மற்றும் பாகிஸ்தான் எல்லையோரமாக உள்ள குனார் மாகாணத்தில், நேற்று முன்தினம் நள்ளிரவு 12.47 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 6.0 என பதிவான இந்த அதிர்வுக்குப் பின், 4.7, 4.3, 5.0 ரிக்டர் அளவுகளில் தொடர்ச்சியான பிந்தைய அதிர்வுகளும் பதிவாகின.
நள்ளிரவு நேரத்தில் மக்கள் உறங்கிக் கொண்டிருந்ததால், பலர் சிக்கிக்கொண்டனர். அதிர்வுகளை உணர்ந்த சிலர் வீடுகளை விட்டு வெளியேறினாலும், குனார் மாகாணத்தின் நுார்கல், சவ்கே, வதபூர் ஆகிய மூன்று மாவட்டங்கள் பெரும் சேதமடைந்து, வீடுகள் இடிந்து விழுந்தன.
மண் மற்றும் கல் கட்டிடங்களால் ஆன வீடுகள் அதிர்வுகளின் தாக்கத்தைக் தாங்க முடியாமல் சிதறியதால், மக்கள் இடிபாடுகளில் சிக்கினர். இதனால் பலியானோரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
அச்சத்தால் ஆயிரக்கணக்கானோர் திறந்தவெளிகளில் தஞ்சமடைந்து வருவதாகவும், மீட்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
















