‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாமில் பொதுமக்கள் அளித்த மனுக்கள் வைகை ஆற்றில் குப்பையாக வீசப்பட்ட சம்பவத்தை, எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கடுமையாக கண்டித்துள்ளார்.
இதுகுறித்து தனது எக்ஸ் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில்,
“மக்களின் குறைகளை உடனுக்குடன் தீர்க்கும் எனக் கூறி திமுக அரசு ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டத்தின் மூலம் பெற்ற மனுக்கள், இன்று சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் வைகை ஆற்றில் குப்பையாக கொட்டப்பட்டுள்ளன. இது கண்டனத்திற்குரியது.
எதிர்க்கட்சியாக இருந்தபோது ஊர் ஊராக சென்று பொதுமக்களிடமிருந்து சேகரிக்கப்பட்ட மனுக்கள் கருப்பு பெட்டிகளில் பூட்டப்பட்டு சாவி காணாமல் போனது. அதேபோல், நீட் ஒழிப்பு வாக்குறுதி அளித்தும், ஆட்சிக்கு வந்தபின் வெறும் மாநாடு நடத்தி மாணவர்களிடம் வாங்கிய கையெழுத்துப் படிவங்களையும் குப்பையாக்கினர்.
இப்போது ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாமில் சேகரிக்கப்பட்ட மனுக்களும் அஸ்தி கரைப்பது போல வைகை ஆற்றில் வீசப்பட்டுள்ளன. மக்களின் வலியும் வேதனையும் புரிந்து கொள்ள முடியாத இந்த அரசு, அவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவது போல நாடகமாடி வருகிறது.
இந்த போலி கண்துடைப்பு நிகழ்ச்சிக்கு மக்கள் வரவிருக்கும் 2026 சட்டமன்றத் தேர்தலில் தக்க பாடம் புகட்டுவார்கள்” என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.