2 நாட்கள் பயணமாக ஜப்பான் சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடிக்கு அந்நாட்டில் வாழும் இந்தியர்கள் மற்றும் ஜப்பானியர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
15-ஆவது இந்தியா – ஜப்பான் உச்சி மாநாட்டில் பங்கேற்க, பிரதமர் மோடி டோக்கியோவுக்கு சென்றடைந்தார். விமான நிலையத்தில் அந்நாட்டு உயர் அதிகாரிகள் அவரை வரவேற்றனர்.
பின்னர், இம்பீரியல் உணவகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், ஜப்பானியர்கள் காயத்ரி மந்திரம் ஓதி பிரதமரை வரவேற்றது சிறப்பாக அமைந்தது. ராஜஸ்தானி உடையில் தோன்றிய சிலர் பஜனை பாடினர். அதன்பின், பாரத நாட்டியம், மோகனியாட்டம், கதக், ஒடிசி போன்ற இந்தியாவின் பாரம்பரிய நடனங்கள் மூலம் பிரதமருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
இந்தியா – ஜப்பான் உச்சி மாநாட்டைத் தொடர்ந்து, ஜப்பான் பிரதமர் ஷிகெரு இஷிபாவுடன் பிரதமர் மோடி இருதரப்பு பேச்சுவார்த்தையில் ஈடுபட உள்ளார். இதில் வர்த்தகம், முதலீடு, தொழில்நுட்பம், பாதுகாப்பு, செமிகண்டக்டர், செயற்கை நுண்ணறிவு உள்ளிட்ட துறைகளில் முக்கிய புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையடுத்து, மோடி சீனாவின் தியான்ஜின் நகருக்கு பயணம் செய்து, வரும் ஞாயிறு மற்றும் திங்கட்கிழமை நடைபெறும் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உச்சி மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றவுள்ளார்.
இந்நிலையில், டோக்கியோவில் நடைபெற்ற இந்தியா – ஜப்பான் பொருளாதார கூட்டமைப்பு கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி,
“உலக நாடுகள் இந்தியாவை உற்றுநோக்கி வருகின்றன; இந்தியாவின் ஆதரவை நாடுகின்றன. ஜப்பான், இந்தியாவில் மெட்ரோ ரயில், உற்பத்தி, தொழில்முனைவு, செமிகண்டக்டர் போன்ற பல துறைகளில் இணைந்து பணியாற்றி வருகிறது. அரசியல் நிலைத்தன்மை கொண்ட இந்தியா விரைவில் உலகின் 3-ஆவது பெரிய பொருளாதார நாடாக மாறும்,” எனக் குறிப்பிட்டார்.