பிரஸல்ஸ் : உக்ரைன் போரை நிறுத்துவதற்கான பேச்சுவார்த்தையில் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் கட்டாயம் பங்கேற்க வேண்டும் என்று ஐரோப்பிய யூனியன் தலைவர் ஊர்சுலா வாண்டர் லியன் வலியுறுத்தியுள்ளார்.
ரஷ்யா – உக்ரைன் போர் மூன்றரை ஆண்டுகளை கடந்தும் நீடித்து வருகிறது. இந்தப் போரை முடிவுக்கு கொண்டுவர அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் பல்வேறு முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறார். சமீபத்தில் புடினுடன் அவர் ஆலோசனைகளையும் மேற்கொண்டிருந்தார்.
இந்நிலையில், உக்ரைன் மீது ரஷ்ய படைகள் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருவது உலக நாடுகளின் கவலைக்குரிய விடயமாக மாறியுள்ளது. இதனையடுத்து, போர் நிறுத்தம் தொடர்பான பேச்சுவார்த்தையில் புடின் கட்டாயம் கலந்துகொள்ள வேண்டும் என்று ஐரோப்பிய யூனியன் தலைவர் வலியுறுத்தியுள்ளார்.
கீவில் உள்ள ஐரோப்பிய யூனியன் அலுவலகத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதலை அடுத்து, உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி மற்றும் அமெரிக்க அதிபர் டிரம்புடன் தொலைபேசியில் பேசியதாகவும், “உக்ரைனுக்கு நீதியான மற்றும் நீடித்த அமைதியை உறுதிப்படுத்த நம்பகமான பாதுகாப்பு உத்தரவாதங்கள் அவசியம். ஐரோப்பா தனது முழு பங்கையும் வழங்கும். குறிப்பாக எங்கள் SAFE என்ற பாதுகாப்புக் கருவி, உக்ரைன் ஆயுதப்படைகளை வலுப்படுத்துவதில் முக்கிய பங்கை வகிக்கும்,” என வாண்டர் லியன் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.