சேலம் :
சேலம் மாவட்டம் அயோத்தியாப்பட்டணம் அருகே சுக்கம்பட்டியை சேர்ந்த நகைக்கடைக்காரர் ரமேஷ் (35) கல்லால் தாக்கப்பட்டு உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உடையாப்பட்டியில் நகை கடை நடத்தி வந்த ரமேஷ், மனைவி நித்யா, இரு பெண் குழந்தைகள், ஒரு ஆண் குழந்தை என குடும்பத்துடன் வாழ்ந்து வந்தார்.
நேற்று மதியம் 3 மணியளவில், காரிப்பட்டி டாஸ்மாக் கடை அருகே ரமேஷ் நண்பருடன் மது அருந்திக் கொண்டிருந்தார். அப்போது, மர்ம நபர் ஒருவர் திடீரென கல்லால் தாக்கியதால் ரமேஷ் கடுமையாக காயமடைந்தார்.
உடனே, அவரது நண்பர் ரமேஷை மீட்டு ஆம்புலன்ஸில் சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினார். ஆனால், பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக உறுதி செய்தனர்.
இந்த சம்பவத்தை அடுத்து காரிப்பட்டி போலீசார் விசாரணை நடத்தினர். ஆரம்ப விசாரணையில், மின்னாம்பள்ளியை சேர்ந்த புருஷோத்தமன் (45) என்பவரிடம் விசாரணை நடைபெற்று வருவதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.