துப்பாக்கி தொழிற்சாலையில் மாமூல் கேட்டு மிரட்டிய வழக்கில், விசிக துணைச் செயலாளர் எஸ்.கே.குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம் பாய்ந்துள்ளது.
திருவள்ளூர் மாவட்டம் நுங்கம்பாக்கத்தில் தனியார் துப்பாக்கி தொழிற்சாலை ஒன்று இயங்கி வருகிறது. கடந்த 17ம் தேதி, அங்கு சென்ற திருவள்ளூர் மேற்கு மாவட்ட விசிக துணைச் செயலாளர் எஸ்.கே.குமார், தொழிற்சாலை நிர்வாகியிடம் மாமூல் கேட்டும் மிரட்டலும் செய்ததாக புகார் எழுந்தது.
இது தொடர்பாக தொழிற்சாலை நிர்வாகி விஸ்வநாதன் அளித்த புகாரின் பேரில், போலீசார் எஸ்.கே.குமாரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். பின்னர் அவர் சிறையில் அடைக்கப்பட்டார்.
இதையடுத்து, மாவட்ட எஸ்.பி. பரிந்துரையின் பேரில், எஸ்.கே.குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம் பாயச் செய்து, மாவட்ட கலெக்டர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
இதற்கிடையே, தொழிற்சாலை ஊழியரை வெளியே வரவழைத்து மாமூல் கேட்டு மிரட்டும் காட்சி, அங்கிருந்த சிசிடிவியில் பதிவாகி வெளியாகியதால் பரபரப்பு நிலவுகிறது.
அதேபோல், திருவாரூரில் பர்னிச்சர் கடையில் பொதுக்கூட்டத்திற்கு பணம் கேட்டும் மிரட்டிய மற்றொரு விசிக நிர்வாகியின் வீடியோவும் வெளியாகி, விவாதத்தை கிளப்பியுள்ளது.