லக்னோ : சர்வதேச விண்வெளி நிலையத்தை அடைந்த பெருமை பெற்ற சுபான்ஷூ சுக்லா, சாதனைக்குப் பிறகு முதல்முறையாக தனது சொந்த ஊரான லக்னோவுக்கு வந்தடைந்தார். அவரை உத்தரப் பிரதேச துணை முதல்வர் பிரஜேஷ் பதக், அவரது பெற்றோர், குடும்பத்தினர் மற்றும் பொதுமக்கள் உற்சாகத்துடன் வரவேற்றனர்.
உத்தரப் பிரதேசம் லக்னோவைச் சேர்ந்த சுபான்ஷூ சுக்லா, அமெரிக்காவின் ஆக்சியம்-4 திட்டத்தின் கீழ் சர்வதேச விண்வெளி நிலையத்துக்குச் சென்று 14 நாட்கள் தங்கி ஆராய்ச்சி மேற்கொண்டு பூமிக்குத் திரும்பினார். இதன் மூலம், சர்வதேச விண்வெளி நிலையத்துக்குச் சென்ற முதல் இந்தியர் என்ற பெருமையைப் பெற்றார்.
சமீபத்தில் இந்தியா திரும்பிய அவர், ஆகஸ்ட் 23ஆம் தேதி டில்லியில் நடைபெற்ற விண்வெளி தின விழாவில் கலந்துகொண்டு பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்தார்.
தாய் நெகிழ்ச்சி
மகன் வருகையைப் பற்றி சுபான்ஷூவின் தாய் ஆஷா சுக்லா தெரிவித்ததாவது :
“என் மகன் ஒன்றரை ஆண்டுகளுக்குப் பிறகு வீடு திரும்பியிருக்கிறான். இவ்வளவு நாள் கழித்து அவனை சந்தித்ததில் நான் மிகுந்த மகிழ்ச்சியும் உற்சாகமும் அடைந்தேன். நாங்கள் அவனை அன்புடன் வரவேற்றோம்,” என்றார்.
சகோதரி கூறுகையில், “இந்த நாளுக்காக நாங்கள் நீண்ட காலமாக காத்திருந்தோம். இது எங்கள் குடும்பத்திற்கே அல்ல, முழு லக்னோவிற்கும் பெருமை தரும் சாதனை. அனைத்து குழந்தைகளும், மக்கள் அனைவரும் அவரை உற்சாகத்துடன் வரவேற்றனர் என்றார்.
உத்தரப் பிரதேச துணை முதல்வர் பிரஜேஷ் பதக் கூறுகையில், “லக்னோவும், இந்தியாவும் பெருமை கொள்ளும் மகனாக சுபான்ஷூ சுக்லா திகழ்கிறார். அவர் உலகத்திற்கு ஒரு புதிய வழியை காட்டியுள்ளார். அவரை கவுரவிக்க உத்தரப் பிரதேச அரசு சிறப்பு நிகழ்ச்சி ஒன்றை ஏற்பாடு செய்துள்ளது. சுபான்ஷூ சுக்லா இளைஞர்களுக்கு ஒரு உத்வேகம்,” என்று தெரிவித்தார்.