ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தியுடன் தொடர்ந்து தொடர்பில் உள்ளதாகவும், இதன் காரணமாகவே ஆந்திராவில் நடந்ததாகக் கூறப்படும் ஓட்டு திருட்டு குறித்து ராகுல் மவுனம் சாதிப்பதாகவும் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி தலைவர் ஜெகன்மோகன் ரெட்டி குற்றம்சாட்டியுள்ளார்.
அமராவதியில் செய்தியாளர்களை சந்தித்த அவர், “ஆந்திர சட்டசபை தேர்தலில் மின்னணு வாக்கு இயந்திரத்தில் பதிவான ஓட்டுகளுக்கும், எண்ணப்பட்ட ஓட்டுகளுக்கும் இடையே வேறுபாடு உள்ளது. டில்லி, மகாராஷ்டிரா, கர்நாடகா போன்ற மாநிலங்களில் ஓட்டு திருட்டு நடந்ததாகக் குற்றம்சாட்டும் ராகுல், ஆந்திராவைப் பற்றி மட்டும் ஏன் பேசவில்லை? காரணம், தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டியின் மூலமாக ராகுலுடன் சந்திரபாபு நாயுடு பேசி வருகிறார்,” என்றார்.
மேலும், “அண்மையில் டில்லியில் நடைபெற்ற சட்டசபை தேர்தலில், இண்டி கூட்டணியில் இருந்த ஆம்ஆத்மி கட்சி தோல்வியை சந்தித்தது. அதைப் பற்றியும் ராகுல் எந்த கருத்தும் சொல்லவில்லை. அவர் செயலில் நேர்மையற்றவர். அவரைப் பற்றி கருத்து சொல்ல எதுவும் இல்லை,” என ஜெகன்மோகன் ரெட்டி தெரிவித்தார்.