பெங்களூரு : இந்தியாவின் இரண்டாவது மிகப்பெரிய கிரிக்கெட் மைதானம் விரைவில் தென்னிந்தியாவில் உருவாகவுள்ளது. கர்நாடக மாநிலம் பெங்களூரு அருகே, பொம்மசந்திரா பகுதியில், ஒரே நேரத்தில் சுமார் 80 ஆயிரம் பார்வையாளர்கள் அமரும் வசதியுடன் இந்த அதிநவீன ஸ்டேடியம் கட்டப்பட உள்ளது.
தற்போது, இந்தியாவில் மிகப்பெரிய கிரிக்கெட் மைதானமாக குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியம் உள்ளது. இங்கு 1,32,000 பார்வையாளர்கள் அமரக்கூடிய வசதி உள்ளது. அதனை தொடர்ந்து, கொல்கத்தாவின் ஈடன் கார்டன்ஸ் மைதானம் 68,000 இருக்கைகளுடன் இரண்டாம் இடத்தில் உள்ளது. இப்போது, 80 ஆயிரம் இருக்கைகளுடன் உருவாகும் பெங்களூரு ஸ்டேடியம், ஈடன் கார்டன்ஸை பின்னுக்குத் தள்ளி இந்தியாவின் இரண்டாவது பெரிய கிரிக்கெட் மைதானம் என்ற பெருமையைப் பெற உள்ளது.
கர்நாடக அரசு இந்த திட்டத்துக்கு 300 கோடி ரூபாய் நிதி ஒதுக்கியுள்ளது. சுமார் 50 ஏக்கர் பரப்பளவில் கட்டப்பட உள்ள இந்த மைதானம், தற்போதைய தலைமுறைக்கு ஏற்ப அதிநவீன வசதிகளுடன், ஒலிம்பிக் போட்டிகள் நடத்தும் தரத்திலும் அமையவுள்ளது. பெங்களூருவில் உள்ள எம்.சின்னசாமி மைதானத்திற்கு மாற்றாக இது உருவாக்கப்படவுள்ளது.
இந்த புதிய மைதானம், கர்நாடகத்தின் விளையாட்டு உள்கட்டமைப்பை மேம்படுத்தி, இளம் வீரர்களுக்கு அதிக வாய்ப்புகளை உருவாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், பெங்களூருவின் வளர்ச்சிக்கும், சுற்றுலாத் துறைக்கும் இது பெரும் ஊக்கமளிக்கும் திட்டமாக கருதப்படுகிறது. மைதானம் முழுமையாக கட்டி முடிந்ததும், பெங்களூரு சர்வதேச விளையாட்டு மையம் என்ற அந்தஸ்தைப் பெறும் வாய்ப்பு அதிகம் உள்ளது.