புவனகிரி பேரூராட்சி அலுவலகத்தில் இளநிலை உதவியாளராக பணியாற்றி வரும் ராதாகிருஷ்ணனை தாக்கிய வழக்கில், விசிக கட்சியைச் சேர்ந்த கவுன்சிலர் பாரதிதாசன் கைது செய்யப்பட்டார்.
நேற்று, பேரூராட்சி அலுவலகத்திற்கு வந்த பாரதிதாசன், தனது வார்டில் மேற்கொள்ளப்பட்ட பணிகளுக்கான தொகையை ஒப்பந்ததாரருக்கு வழங்க பில் தயாரிக்கும்படி ராதாகிருஷ்ணனை கேட்டுள்ளார். அப்போது, அவர் வேறொரு அவசரப் பணியில் இருப்பதாகவும், பில்லை பின்னர் தயார் செய்வதாகவும் தெரிவித்ததாக கூறப்படுகிறது.
இதனால் ஏற்பட்ட வாக்குவாதத்தில், கவுன்சிலர் பாரதிதாசன், ராதாகிருஷ்ணனை தகாத வார்த்தைகளால் திட்டியதுடன் முகத்தில் குத்தியதாகவும், பின்னர் இருவருக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டதாகவும் போலீஸ் தெரிவித்துள்ளது.
காயமடைந்த ராதாகிருஷ்ணன், அருகிலுள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவர் அளித்த புகாரின் பேரில், சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த புவனகிரி போலீசார், பாரதிதாசனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.