பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் ராமதாஸ், தன்னிடம் உளவுத்துறைக்கு ஒப்பான முறையில் கண்காணிப்பு நடைபெற்றுள்ளதாக அதிர்ச்சிகரமான குற்றச்சாட்டை எழுப்பியுள்ளார். இது தொடர்பாக அவர் விழுப்புரம் காவல்துறையிலும், சைபர் கிரைம் பிரிவிலும் புகார் அளித்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
“உலகத்தில் தந்தையையே வேவுபார்த்த பிள்ளை இருக்கிறதா என்றால், இருக்கிறது. அந்த மாதிரி என்னைவேவு பார்த்திருக்கிறார்கள்,” எனவும், “கட்சி பெயரில் 17ம் தேதி பொதுக்குழு கூட்டத்திற்கான அறிவிப்பை நான் ஏற்கனவே வெளியிட்டுள்ளேன். எனவே வேறு யாரும் அதே பெயரில் கூட்டம் நடத்துவதாக கூறுவது சட்டவிரோதம்,” என்றும் ராமதாஸ் வலியுறுத்தினார்.
மேலும், “இந்த செயலில் பயன்படுத்தப்பட்ட ஒட்டுக்கேட்பு கருவிகள் அனைத்தும் காவல்துறைக்கு ஒப்படைக்கப்பட்டுள்ளன. சைபர் கிரைமும், காவல்துறையும் விசாரணை நடத்தி வருகின்றன. அதற்குப் பிரத்தியேகமாக ஒரு தனியார் விசாரணை நிறுவத்தையும் நியமித்துள்ளேன். அவர்கள் விரைவில் அறிக்கையை சமர்ப்பிக்கவுள்ளனர். இது போலீசாருக்கும் உதவியாக இருக்கும்,” என்றார்.
கட்சியின் தலைவர் என்ற முறையில், தன்னைக் கட்சியினர் சந்திக்கக் கூடாது என்று கூறுவதற்கு யாருக்கும் உரிமையில்லை என்றும் ராமதாஸ் சுட்டிக்காட்டினார்.
அதிகரிக்கும் குடும்ப அரசியல் ஒழுக்கங்கள், பாமகவில் உருவாகும் உட்கட்சிச் சச்சரவுகளை வெளிப்படுத்தும் வகையில் இந்த நிகழ்வு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.