ஹாசன் மாவட்டம் அரகேரே பகுதியில் வசித்து வந்த 8ம் வகுப்பு மாணவன் நிஷ்சித், ஜூலை 30ஆம் தேதி டியூசனில் இருந்து வீடு திரும்பும்போது மர்ம நபர்களால் கடத்தப்பட்டார். சிறுவன் வீடு திரும்பாததைத் தொடர்ந்து, அவரது தந்தை அச்சுதா ஹூலிமாவு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.
இதையடுத்து விசாரணை முன்னெடுத்த போலீசார், நேற்று மாலை பன்னீர்ஹட்டா – கோட்டிகெர் சாலையில் எரிந்த நிலையில் நிஷ்சித்தின் சடலத்தை கண்டெடுத்தனர்.
தொடர்ந்த விசாரணையில், இந்த கடத்தல் மற்றும் கொலைச் சம்பவத்தில் அவரது வீட்டில் பகுதிநேர ஓட்டுநராக பணியாற்றிய குருமூர்த்தி மற்றும் அவரது நண்பர் கோபால கிருஷ்ணன் குற்றவாளிகள் என தெரியவந்தது.
போலீசார் இருவரையும் கைது செய்யச் சென்றபோது, அவர்கள் தப்பியோட முயன்றதாக கூறப்படுகிறது. இதையடுத்து, போலீசார் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில் இருவரும் கால் பகுதியில் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கொலை, மற்றும் போலீசாரின் துப்பாக்கிச் சூடு ஆகிய சம்பவங்கள் ஒரே நேரத்தில் நடந்துள்ளதால், இது கர்நாடகாவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.