8 வயது சிறுவன் ஸ்டீல் பெட்டியில் கண் தோண்டப்பட்ட நிலையில் கண்டெடுப்பு !

லக்னோ: உத்தரப் பிரதேசத்தின் பரேலி மாவட்டத்தை அதிர்ச்சியில் ஆழ்த்தும் வகையில், அடையாளம் தெரியாத சிறுவன் ஒருவரின் சடலம் ஸ்டீல் பெட்டிக்குள் மிகவும் கொடூரமான நிலையில் கண்டெடுக்கப்பட்டது. வயது 8 முதல் 9 வரை இருக்கலாம் என போலீசார் தெரிவித்துள்ளனர்.

நகட்டியா ஆற்றின் அருகே, டெல்லி–லக்னோ தேசிய நெடுஞ்சாலையில் வைக்கப்பட்டிருந்த ஸ்டீல் பெட்டியில் சிறுவனின் உடல் கிடந்தது. குறிப்பாக, அவரது இடது கண் கூர்மையான ஆயுதத்தால் தோண்டப்பட்டிருந்தது என்பதும், பெட்டிக்குள் ஸ்நாக்ஸ் பாக்கெட்டுகள், பிஸ்கட், சிறிய தலையணை, போர்வை ஆகியவை இருந்ததும் போலீசரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

முதற்கட்ட விசாரணை

சம்பவ இடத்துக்கு விரைந்த போலீசார் சடலத்தை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பினர். பரேலி நகர காவல் கண்காணிப்பாளர் மனுஷ் பரேக் கூறுகையில்:

“சுமார் 7–8 மணி நேரத்திற்கு முன்பே சிறுவன் கொல்லப்பட்டிருக்கலாம். இடது கண் கொடூரமாக அகற்றப்பட்டிருக்கிறது. தடயவியல் நிபுணர்கள் அனைத்து சான்றுகளையும் சேகரித்து வருகின்றனர்.”

நெடுஞ்சாலையில் மக்கள் நடமாட்டம் குறைவாக இருக்கும் இடத்தில் உடலை வீசப்பட்டுள்ளதாக போலீசார் கருதுகின்றனர்.

கொலையாளியைத் தேடும் நான்கு தனிப்படைகள்

இந்த வழக்கை விசாரிக்க போலீசார் நான்கு தனிப்பிரிவுகளை அமைத்துள்ளனர். அருகிலுள்ள சிசிடிவி காட்சிகள் சேகரிக்கப்பட்டு பரிசோதிக்கப்பட்டு வருகிறது. மேலும், பரேலி மற்றும் சுற்றுவட்டார போலீஸ் நிலையங்களில் மாயமான குழந்தைகள் குறித்த புகார்கள் ஒப்பிட்டு பரிசோதிக்கப்படுகின்றன.

நரபலி சந்தேகமா?

இந்த வழக்கு தொடர்பாக காவல் ஆய்வாளர் பிஜேந்திர சிங் கூறுகையில்: “கடத்தல், கொலை போன்ற அனைத்து கோணங்களிலும் விசாரணை நடைபெறுகிறது. சிறுவனின் கண் தோண்டப்பட்டுள்ளதால், இது நரபலி சம்பவமாக இருக்கக்கூடும் என்ற சந்தேகமும் எழுகிறது. ஆனால் உடற்கூறு ஆய்வு அறிக்கை வந்த பின்பே உறுதி செய்ய முடியும்.”

சடலத்தின் அடையாளத்தை கண்டறிதல் தற்போது போலீசின் முதல் முன்னுரிமையாக உள்ளது.

Exit mobile version