2019-ம் ஆண்டு கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் 16 வயது சிறுமியை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்த 7 பேருக்கு, சாகும் வரை சிறைத் தண்டனை மற்றும் தலா ரூ.50,000 அபராதம் விதித்து கோவை முதன்மை போக்சோ நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் உள்ள ஒரு பூங்காவில், 2019ம் ஆண்டு நவம்பர் மாதத்தில் 16 வயது சிறுமி தனது நண்பருடன் பேசிக்கொண்டிருந்தபோது, அந்த இடத்திற்கு வந்த ஏழு பேர் கொண்ட கும்பல் இருவரையும் தாக்கியது. பின்னர், சிறுமியை பூங்காவின் ஒதுங்கிய பகுதிக்கு இழுத்துச் சென்று, அவர்மீது கூட்டு பாலியல் வன்கொடுமை நடத்தினர்.
இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி, மணிகண்டன், கார்த்திக், ராகுல், பிரகாஷ், நாராயணமூர்த்தி, கார்த்திகேயன் மற்றும் வேறொரு மணிகண்டன் ஆகிய ஏழு பேரையும் கைது செய்தனர்.
இந்த வழக்கு கோவை முதன்மை போக்சோ (POCSO) நீதிமன்றத்தில் விசாரணைக்காக எடுத்துக்கொள்ளப்பட்டது. சாட்சி மற்றும் ஆதாரங்களை பரிசீலித்த நீதிபதி பகவதியம்மாள், குற்றவாளிகள் ஏழு பேருக்கும் சாகும் வரை சிறைத் தண்டனை மற்றும் தலா ரூ.50 ஆயிரம் அபராதம் விதித்து தீர்ப்பு வழங்கினார்.
இந்த தீர்ப்பு, பாலியல் குற்றங்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படுவதை எடுத்துக்காட்டுவதாகும்.