பிரேசிலின் ரியோ டி ஜெனிரோ நகரில், போதைப்பொருள் கடத்தல் கும்பலை பிடிக்க போலீசார் நடத்திய அதிரடி சோதனையில் துப்பாக்கிச்சூடு சம்பவம் ஏற்பட்டது. இதில், நான்கு போலீசார் உட்பட மொத்தம் 64 பேர் உயிரிழந்துள்ளனர்.
போதைப்பொருள் கடத்தல் வலையமைப்புகள் கடந்த சில மாதங்களாக அதிகரித்து வந்த நிலையில், இதை அடக்குவதற்காக 2,500க்கும் மேற்பட்ட போலீசார் ஒருங்கிணைந்த தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டனர். சோதனையின் போது கும்பல் உறுப்பினர்கள் துப்பாக்கியால் தாக்கியதால், கடுமையான மோதல் ஏற்பட்டது.
இதையடுத்து போலீசார் எதிர்தாக்குதல் நடத்தினர். நீண்ட நேரம் நீடித்த துப்பாக்கிச்சூட்டில் பலர் பலியாகியதாகவும், 80 பேர் கைது செய்யப்பட்டதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
பாதுகாப்பு காரணங்களால் நகரில் உள்ள 46 பள்ளிகள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன. ரியோ பெடரல் பல்கலைக்கழகத்தில் நடைபெறவிருந்த வகுப்புகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. பல்கலைக்கழக விடுதிகளில் தங்கி இருக்கும் மாணவர்கள் பாதுகாப்பாக உள்ளதாக கல்வித் துறை அறிவித்துள்ளது.
ஒரு வருடத்துக்கும் மேலாக நடைபெற்ற ரகசிய விசாரணையின் முடிவாக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
“இந்த சோதனை ரியோவின் வரலாற்றில் மிகப்பெரிய நடவடிக்கை. குற்றவாளிகளை ஒழிக்க அரசு மேலும் ஆதரவு வழங்க வேண்டும்,” என ரியோ டி ஜெனிரோ மாநில ஆளுநர் கிளாடியோ காஸ்ட்ரோ தெரிவித்துள்ளார்.
தற்போது அந்த பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு, மோதல் மீண்டும் ஏற்படாமல் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
















