சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள கூலமேடு கிராமத்தில், தைப்பொங்கல் திருவிழாவை முன்னிட்டு ஆண்டுதோறும் நடத்தப்படும் பாரம்பரிய ஜல்லிக்கட்டுப் போட்டி இன்று மிக பிரம்மாண்டமாக நடைபெற்றது. தமிழகத்தின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டை முன்னின்று நடத்தும் கூலமேடு ஜல்லிக்கட்டு விழாவானது, இப்பகுதி மக்களின் வீரத்திற்கும் கலாச்சாரத்திற்கும் சான்றாக அமைந்தது. போட்டியின் தொடக்கமாக, களத்தில் இறங்கத் தயாராக இருந்த 500 மாடுபிடி வீரர்களும் சேலம் மாவட்ட வருவாய் அலுவலர் (DRO) ரவிக்குமார், திமுக மாவட்ட செயலாளர் எஸ்.ஆர். சிவலிங்கம் மற்றும் வருவாய் ஆய்வாளர்கள் முன்னிலையில், “காளைகளுக்குத் துன்பம் விளைவிக்க மாட்டோம்; விதிகளுக்கு உட்பட்டு விளையாடுவோம்” என உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். அதனைத் தொடர்ந்து, வாடிவாசலில் சிறப்புப் பூஜைகள் செய்யப்பட்டு முதலில் ‘சாமி மாடு’ அவிழ்த்து விடப்பட்டது. பின்னர், மாவட்ட செயலாளர் எஸ்.ஆர். சிவலிங்கம் கொடியசைத்துப் போட்டியை அதிகாரப்பூர்வமாகத் தொடங்கி வைத்தார்.
வாடிவாசல் வழியாகச் சீறிப்பாய்ந்த 600-க்கும் மேற்பட்ட காளைகள், மாடுபிடி வீரர்களின் பிடியில் சிக்காமல் களத்தில் நின்று விளையாடியது காண்போரை வியப்பில் ஆழ்த்தியது. குறிப்பாக, இன்றைய போட்டியில் மாடுபிடி வீரர்களை விடவும், காளைகளே ஆதிக்கம் செலுத்தி அதிகப்படியான பரிசுகளைத் தட்டிச் சென்றது ஒரு சிறப்பம்சமாக அமைந்தது. வெற்றி பெற்ற காளைகளின் உரிமையாளர்களுக்கும், காளைகளை அடக்கிய வீரர்களுக்கும் கேஸ் அடுப்பு, சைக்கிள், அண்டாக்கள் மற்றும் டைனிங் டேபிள்கள் போன்ற மதிப்புமிக்கப் பரிசுகள் உடனுக்குடன் வழங்கப்பட்டன. மாடுபிடி வீரர்கள் காளைகளின் வேகத்தைக் கண்டு தற்காப்புக்காகப் பேரிக்காடுகளில் அமர்ந்து கொண்டதால், மைதானத்தைச் சுற்றித் திரண்டிருந்த ஆயிரக்கணக்கான பொதுமக்கள் காளைகளின் தனித்துவமான ஆட்டத்தை மட்டும் வெகுவாகக் கண்டு ரசித்தனர்.
இந்த வீர விளையாட்டு நிகழ்வில் கள்ளக்குறிச்சி நாடாளுமன்ற உறுப்பினர் மலையரசன், ஒன்றிய செயலாளர்கள் செழியன், சித்தார்த்தன், வரதராஜன் மற்றும் ஆத்தூர் தாசில்தார் ஜெயக்குமார் ஆகியோர் கலந்துகொண்டு வீரர்களை உற்சாகப்படுத்தினர். ஆத்தூர், கெங்கவல்லி, வாழப்பாடி, தம்மம்பட்டி மற்றும் அதனைச் சுற்றியுள்ள நூற்றுக்கணக்கான கிராமங்களில் இருந்து ஆயிரக்கணக்கான மக்கள் ஜல்லிக்கட்டைப் பார்க்கக் குவிந்தனர். பாதுகாப்பு ஏற்பாடுகளை ஆத்தூர் டிஎஸ்பி சத்யராஜ் நேரில் கண்காணித்தார். அசம்பாவிதங்கள் ஏதுமின்றிப் போட்டிகள் நடைபெறுவதை உறுதி செய்ய 500-க்கும் மேற்பட்ட காவல்துறையினர் தீவிரப் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர். மருத்துவக் குழுவினர் மற்றும் கால்நடை மருத்துவக் குழுவினர் மைதானத்தில் தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்தனர்.
