பள்ளி மாடியிலிருந்து குதித்த 4ம் வகுப்பு மாணவி உயிரிழப்பு !

ஜெய்ப்பூர் : ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் உள்ள தனியார் பள்ளியில், நான்காம் வகுப்பு படிக்கும் 9 வயது சிறுமி பள்ளி கட்டிடத்தின் நான்காவது மாடியிலிருந்து குதித்து உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிகழ்வு நவம்பர் 1ஆம் தேதி மதியம் 1.30 மணியளவில் மன்சரோவர் பகுதியில் அமைந்துள்ள பள்ளியில் நடந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் பரவி வருகின்றன. அதில், அமய்ரா என்ற சிறுமி தடுப்புச்சுவரின் மீது ஏறி சில வினாடிகள் அமர்ந்தபின் கீழே குதிக்கும் காட்சி தெளிவாக பதிவு செய்யப்பட்டிருக்கிறது. சுமார் 47 அடி உயரத்திலிருந்து விழுந்த சிறுமி, கீழே இருந்த செடிகளில் மோதியபோது தலையில் கடுமையான காயம் ஏற்பட்டதாக போலீஸ் தரப்பில் கூறப்பட்டுள்ளது.

உடனடியாக பள்ளி நிர்வாகம் சிறுமியை மீட்டு அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றது. ஆனால் அங்கு மருத்துவர்கள் அவரை பரிசோதித்தபோது, சுவாசம் தடுக்கப்பட்டு, உடல் முழுவதும் கடுமையான உள்காயங்கள் ஏற்பட்டிருந்ததாக தெரிவித்தனர்.

மருத்துவர்கள் கூறுகையில், “சிறுமியின் விலா எலும்புகள் முறிந்து உள் உறுப்புகளை தாக்கியதால் நிலைமை மிகவும் மோசமாக இருந்தது. அதிக ரத்தப்போக்கு மற்றும் தலையில் ஆழமான காயம் காரணமாக உயிரிழந்துள்ளார்,” என தெரிவித்தனர்.

இந்நிலையில், சம்பவம் நடந்த இடத்தில் ரத்தக் கறைகள் உள்ளிட்ட ஆதாரங்கள் காணாமற்போனது விசாரணை அதிகாரிகளை சந்தேகத்தில் ஆழ்த்தியுள்ளது. பள்ளி நிர்வாகம் சம்பவத்துக்குப் பிறகு உடனே அந்த இடத்தை சுத்தம் செய்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. சட்டப்படி ஆதாரங்கள் பாதுகாக்கப்பட வேண்டும் என்றாலும், பள்ளி நிர்வாகம் அவற்றை அழித்ததாக கூறப்படுகிறது.

இதையடுத்து, சிறுமியின் பெற்றோர் பள்ளி நிர்வாகம் மற்றும் ஆசிரியர்களுக்கு எதிராக புகார் அளித்துள்ளனர். அதன்பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை ஆரம்பித்துள்ளனர்.

சிறுமியின் தந்தை பேட்டியளித்தபோது, “எனது மகள் பள்ளிக்குச் சென்றபோது முற்றிலும் நலமாக இருந்தார். எதுவும் மன உளைச்சல் இல்லை. பள்ளி நிர்வாகம் சம்பவம் குறித்து எங்களிடம் எதுவும் தெரிவிக்கவில்லை; சம்பவ இடத்திற்குக் கூட எங்களை அனுமதிக்கவில்லை. எனது மகளின் மரணத்தில் சந்தேகம் இருக்கிறது,” எனக் கூறியுள்ளார்.

போலீசார் தற்போது தற்கொலை கோணத்திலும், அலட்சியக்கோணத்திலும் விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்தச் சம்பவம் ஜெய்ப்பூர் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Exit mobile version