மதீனா அருகே உம்ரா புனிதப் பயணிகள் சென்ற பஸ், டீசல் டேங்கர் லாரியுடன் மோதி நேற்று ஏற்பட்ட மிகப்பெரும் விபத்தில் 42 பேர் உயிரிழந்த நிலையில், ஒரே ஒருவர் மட்டுமே உயிர்தப்பியிருப்பது உறுதி செய்யப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மெக்காவுக்கு அடுத்த முக்கிய புனித நகரமான மதீனாவிலிருந்து சுமார் 160 கிலோமீட்டர் தொலைவில் உள்ள முப்ரிபாத் பகுதியில் இந்த விபத்து இடம்பெற்றது. உம்ரா பயணிகளைக் கொண்ட பஸ் நேருக்கு நேர் வந்த டேங்கர் லாரியை மோதி தீப்பிடித்ததாக கூறப்படுகிறது. இதில் ஹைதராபாத் பகுதியைச் சேர்ந்த 20 பெண்கள், 11 குழந்தைகள் உட்பட 42 பேர் உயிரிழந்தனர்.
மீட்புப்படைகள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று மீட்புப்பணிகளை மேற்கொண்டபோது, பஸ்சில் பயணித்தவர்களில் ஒருவருக்கு மட்டுமே உயிர் இருந்தது தெரியவந்தது. கடுமையாக காயமடைந்த அந்த பயணியை உடனடியாக அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்று தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதித்தனர்.
உயிர்தப்பியவராக அடையாளம் காணப்பட்டவர் ஹைதராபாத்தைச் சேர்ந்த 24 வயதான முகமது அப்துல் சோயிப். விபத்தின் போது அவர் பஸ் டிரைவர் அருகிலிருந்த ஆசனத்தில் அமர்ந்து பயணம் செய்ததாக தெரிவிக்கப்படுகிறது. தற்போது அவர் சவுதி அரேபியாவின் ஒரு மருத்துவமனையில் தொடர்ந்து கண்காணிப்பில் இருக்கிறார். அவரின் தற்போதைய உடல்நிலை குறித்து அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகவில்லை.
இந்த சம்பவத்தால் துயரத்தில் ஆழ்ந்துள்ள பலி பெற்றோரின் குடும்பங்களை உதவும் நோக்கில், சவுதிக்கு உடனடியாக பயணிக்க வேண்டிய உறவினர்களின் பாஸ்போர்ட்டுகளை துரிதமாக வழங்கவும், தேவையான அனைத்து உதவிகளையும் செய்யவும் தெலுங்கானா அரசு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளது.
