பீகார் மாநிலம் பூர்னியா அருகே வந்தே பாரத் ரயில் மோதி 4 பேர் உயிரிழந்தனர். மேலும் 2 பேர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அதிகாலை 5 மணி அளவில் ஜோக்பானியிலிருந்து பாடலிபுத்ரா நோக்கி சென்று கொண்டிருந்த வந்தே பாரத் ரயில், பூர்னியா நகரம் அருகே சென்றபோது இந்த விபத்து நிகழ்ந்தது. அப்போது ரயில் பாதை அருகே 6 பேர் ரீல்ஸ் எடுக்க முயன்றதாக தெரிவிக்கப்படுகிறது. திடீரென ரயில் மோதி, அவர்களில் 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மற்ற 2 பேர் கடுமையாக காயமடைந்த நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த சம்பவம் குறித்து ரயில்வே போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விபத்துக்கான காரணம் குறித்து கூடுதல் தகவல்கள் திரட்டப்பட்டு வருகின்றன.
இதுகுறித்து பாஜக எம்எல்ஏ கிருஷ்ண குமார் ரிஷி தெரிவித்ததாவது:
“இது மிகவும் துயரமான நிகழ்வு. துரதிர்ஷ்டவசமாக, ஒரு பெரிய விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் நான்கு பேர் உயிரிழந்துள்ளனர்; இருவர் காயமடைந்துள்ளனர்” என்றார்.