நீலகிரி மாவட்டம் கூடலூரில் உள்ள அரசு சுபாஷ் சந்திரபோஸ் பழங்குடியினர் உண்டு உறைவிடப் பள்ளி மாணவர்கள் 33 பேருக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த பள்ளி, கூடலூர் அரசு மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் இயங்குகிறது. நேற்று மாணவர்கள் பலருக்கும் வாந்தி, மயக்கம் போன்ற அறிகுறிகள் தென்பட்ட நிலையில், உடனடியாக அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
மருத்துவர்கள் தீவிரமாக சிகிச்சை அளித்ததில், பெரும்பாலான மாணவர்கள் நலமடைந்து பள்ளிக்கு திரும்பியுள்ளனர். அதேசமயம், நான்கு மாணவர்கள் தற்போது உள்நோயாளிகளாக மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை பெறுகின்றனர்.
இந்நிலையில், இத்தனை மாணவர்கள் ஒரே நேரத்தில் உடல்நலக்குறைவுக்கு உள்ளானதற்கான காரணம் என்ன என்பது குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். உணவோ அல்லது குடிநீரோ மூலமாக பாதிப்பு ஏற்பட்டிருக்க வாய்ப்பு இருப்பதால், பள்ளி வளாகத்தில் உணவு மற்றும் தண்ணீர் மாதிரிகள் ஆய்வுக்காக சேகரிக்கப்பட்டுள்ளன.
மேலும், மாணவர்கள் மீண்டும் பாதிக்கப்படாத வகையில் பள்ளியில் மீண்டும் மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.