கோவையில் பிஎஸ்ஜி செவிலியக் கல்லூரியின் 32-வது விளக்கு ஏற்றும் விழா: பத்மஸ்ரீ சாந்தி தெரசா லக்ரா அறிவுரை.

கோவையின் முன்னணி மருத்துவக் கல்வி நிறுவனமான பிஎஸ்ஜி (PSG) செவிலியக் கல்லூரியின் 32-வது விளக்கு ஏற்றும் விழா, பிஎஸ்ஜி ஐஎம்எஸ்அன்ஆர் (IMS&R) கலை அரங்கில் மிகச் சிறப்பாக நடைபெற்றது. மருத்துவத் துறையில் செவிலியர் பணி என்பது வெறும் வேலையாக அன்றி, அது ஒரு புனிதமான அர்ப்பணிப்பு என்பதை உணர்த்தும் வகையில் ஆண்டுதோறும் இந்த விளக்கு ஏற்றும் விழா நடத்தப்பட்டு வருகிறது. அறிவு, கருணை மற்றும் தொழில்முறை நேர்மையைக் கொண்டாடும் இந்த உன்னத நிகழ்வில், மருத்துவத் துறைத் தலைவர்கள், பேராசிரியர்கள் மற்றும் முதலாண்டு செவிலியர் மாணவிகள் திரளாகக் கலந்துகொண்டனர். விழாவின் தொடக்கமாகப் பிஎஸ்ஜி செவிலியக் கல்லூரி முதல்வர் முனைவர் ஜெயதீபா வரவேற்புரையாற்றினார். அப்போது அவர் பேசுகையில், “சமூகத்தில் செவிலியர்கள் ஏற்கும் பொறுப்பு மிகவும் புனிதமானது; திறமையான, அதேசமயம் மிகுந்த கருணை கொண்ட பராமரிப்பாளர்களை உருவாக்குவதே எமது கல்லூரியின் முதன்மை நோக்கம்” என்று பெருமிதத்துடன் குறிப்பிட்டார்.

விழாவின் ஒரு பகுதியாக, ஒரு தலைமுறையிலிருந்து அடுத்த தலைமுறைக்கு அறிவும் சேவையும் கடத்தப்படுவதைக் குறிக்கும் வகையில், சிறப்பு அழைப்பாளர்கள் ஏற்றிய சுடரிலிருந்து மாணவிகள் தங்களது மெழுகுவர்த்திகளில் ஒளியைப் பெற்றுக்கொண்டனர். இந்த ஒளிமயமான சூழலில், பிஎஸ்ஜி மருத்துவமனையின் செவிலியர் மேற்பார்வையாளர் அனுராதா தலைமையில், செவிலியர் குல தெய்வம் பிளாரன்ஸ் நைட்டிங்கேல் பெயரிலான சர்வதேச செவிலியர் உறுதிமொழியை மாணவிகள் பக்திப் பரவசத்துடன் ஏற்றுக்கொண்டனர். இந்நிகழ்வில் ஹாட் எக்லே டி சான்டே வான்ட் நிறுவனத்தின் மூத்த விரிவுரையாளர் மரியெல்லே ஷ்மிட் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்று, உலகளாவிய அளவில் செவிலியத் துறையில் ஏற்பட்டு வரும் நவீன மாற்றங்கள் மற்றும் முன்னேற்றங்கள் குறித்து மாணவிகளுக்கு விரிவாக எடுத்துரைத்தார்.

நிகழ்ச்சியின் சிகரமாக, இந்தியச் சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகத்தின் பழங்குடியினர் சுகாதாரப் பிரிவு (அந்தமான் நிக்கோபார் தீவுகள்) துணை செவிலியர் மற்றும் பத்மஸ்ரீ விருது பெற்ற சாந்தி தெரசா லக்ரா முதன்மை அழைப்பாளராக உரையாற்றினார். அந்தமான் போன்ற தொலைதூர மற்றும் சவாலான நிலப்பரப்புகளில் பழங்குடியின மக்களுக்குச் சேவை செய்த தனது அனுபவங்களைப் பகிர்ந்துகொண்ட அவர், “செவிலியர்கள் தங்களது கற்றலை ஒருபோதும் நிறுத்தக்கூடாது; நவீனத் தொழில்நுட்பங்களைக் கற்றுக்கொள்வதோடு, நோயாளிகளிடமும் ஆசிரியர்களிடமும் மிகுந்த மரியாதையுடனும் அன்புடனும் நடந்து கொள்ள வேண்டும். பின்தங்கிய சமூகங்களில் ஒரு செவிலியர் நினைத்தால் மிகப்பெரிய ஆரோக்கிய மாற்றத்தை உருவாக்க முடியும்” என்று ஊக்கமளித்தார். விழாவின் நிறைவாகப் பிஎஸ்ஜி செவிலியர் கல்லூரி துணை முதல்வர் மீரா நன்றி கூறினார்.

Exit mobile version