தமிழகத்தில் கோடை விடுமுறை முடிந்து, பள்ளிகள் கடந்த ஜூன் மாதம் திறக்கப்பட்டன. ஜூன், ஜூலை மாதங்களில் அரசு விடுமுறைகள் இல்லாததால், மாணவர்கள் தொடர்ந்து பள்ளிக்கு சென்றனர்.
ஆனால், ஆகஸ்ட் மாதம் மாணவர்களுக்கு சுதந்திர தினம், விநாயகர் சதூர்த்தி போன்ற அரசு விடுமுறைகள் கிடைத்ததால் சிறிய கொண்டாட்ட சூழல் நிலவியது. குறிப்பாக சுதந்திர தினம் வெள்ளிக்கிழமையில் வந்ததால், வெள்ளி, சனி, ஞாயிறு என தொடர்ந்து மூன்று நாட்கள் விடுமுறை கிடைத்தது. இதனால் மாணவர்களின் பெற்றோர்களும் பயணத் திட்டங்களை அமைத்தனர்.
இந்நிலையில், அடுத்த மாதம் (செப்டம்பர்) முதல் வாரத்தில் மீண்டும் பள்ளி மாணவர்களுக்கு தொடர்ந்து மூன்று நாட்கள் விடுமுறை கிடைக்கவுள்ளது. செப்டம்பர் 5ஆம் தேதி மிலாடி நபி திருநாளை முன்னிட்டு அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
அன்று வெள்ளிக்கிழமை வருவதால், அதனைத் தொடர்ந்து சனி, ஞாயிறு விடுமுறையுடன் மாணவர்களுக்கு தொடர்ந்து மூன்று நாட்கள் விடுமுறை கிடைக்க உள்ளது. இதனால் பெற்றோர்கள் தற்போதே வெளியூர் சுற்றுப் பயணங்களுக்கு திட்டமிடத் தொடங்கியுள்ளனர்.
மேலும், காலாண்டுத் தேர்வுக்கு முன் மாணவர்களுக்கு கிடைக்கும் இந்த மூன்று நாட்கள் விடுமுறை, அவர்களுக்கு ஓய்வையும் புத்துணர்ச்சியையும் அளித்து, தேர்வுத் தயாரிப்பில் உற்சாகமாக ஈடுபட உதவும் என்று கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
