துபாயிலிருந்து இந்தியாவுக்கு தங்கம் கடத்திய குஜராத் தம்பதியினர், சூரத் விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து மொத்தம் 28 கிலோ தங்க பேஸ்ட் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
குஜராத் மாநிலம் சூரத் விமான நிலையத்தில் இருந்து நேற்று துபாயிலிருந்து ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் (IX-174) வந்திறங்கியது. இந்த விமானத்தில் பயணம் செய்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தம்பதியர் மீது சந்தேகம் ஏற்பட்ட மத்திய தொழில்துறை பாதுகாப்புப் படையினர் (CISF), அவர்களை விரிவாக சோதனையிட்டனர்.
சோதனையின் போது, அந்த தம்பதியரின் உடலில் — குறிப்பாக மேல் உடல்பகுதி மற்றும் இடுப்புப் பகுதியில் — பேஸ்ட் வடிவத்தில் மறைத்து கட்டிய நிலையில் தங்கம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், ஆணிடம் 12 கிலோ தங்கமும், பெண்ணிடம் 16 கிலோ தங்கமும் இருந்ததாகத் தெரிவித்தனர்.
மொத்தம் 28 கிலோ தங்க பேஸ்ட் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இது சூரத் விமான நிலைய வரலாற்றில் மிகப்பெரிய தங்கக் கடத்தல் முயற்சியாக அதிகாரிகள் கருதுகின்றனர். கைது செய்யப்பட்ட இருவரும் குஜராதை சேர்ந்தவர்கள் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.
தங்கத்தின் மதிப்பு கோடிக்கணக்கில் இருப்பதாக ஊடகங்கள் தெரிவிக்கின்றன. கைது செய்யப்பட்ட தம்பதியரிடம் மேலும் விசாரணை நடைபெற்று வருகிறது.