அமெரிக்காவுக்கு தபால் சேவையை நிறுத்திய 25 நாடுகள்

நியூயார்க் :
வெளிநாடுகளில் இருந்து அமெரிக்காவுக்கான சிறிய பார்சல்கள் தொடர்பான வரி விலக்கு ரத்து செய்யப்பட்ட நிலையில், புதிய வரி குறித்து தெளிவான தகவல் இல்லாததால் 25 நாடுகள் அமெரிக்காவுக்கான பார்சல் சேவையை நிறுத்தியுள்ளன.

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், தனது நாட்டுடன் வர்த்தக பற்றாக்குறையைப் பேணி வரும் நாடுகளுக்கு 50 சதவீதம் வரை வரி விதித்து வருகிறார். இதற்கிடையே, 800 டாலர் மதிப்புக்குள் உள்ள சிறிய பார்சல்களுக்கு அமெரிக்கா இதுவரை வரி விலக்கு அளித்து வந்தது.

ஆனால், அந்த விலக்கு நாளை முதல் ரத்து செய்யப்படும் என டிரம்ப் அறிவித்துள்ளார். ஆனால், புதிய வரி எவ்வளவு என அமெரிக்கா இன்னும் அறிவிக்கவில்லை. வர்த்தக ஒப்பந்தத்தின் அடிப்படையில் விதிக்கப்பட்டுள்ள வரிகளைப் போலவே, பார்சல்களுக்கும் வரி விதிக்கப்படலாம் என கூறப்படுகிறது.

பார்சல்களுக்கு எவ்வாறு வரி வசூலிக்கப்படும் என்ற விவரம் தொடர்பாக அமெரிக்கா தெளிவான வழிகாட்டுதலை வழங்காததால், இந்தியா, பிரான்ஸ், பிரிட்டன், ஜெர்மனி, இத்தாலி, ஆஸ்திரேலியா, ஜப்பான் உள்ளிட்ட 25 நாடுகள் அமெரிக்காவுக்கான பார்சல் சேவையை நிறுத்தியுள்ளதாக ஐ.நா.வின் சர்வதேச தபால் யூனியன் தெரிவித்துள்ளது.

அதேவேளை, 100 டாலருக்கு குறைவான மதிப்புள்ள பரிசுப் பொருட்கள் அனுப்பும் சேவைக்கு மட்டும் அமெரிக்கா வரி விதிப்பதில்லை. எனவே அந்த சேவை தொடர்ந்து செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version