பாவ்நகர் நகரத்தில் நடைபெற்ற கார் பந்தயம், இரண்டு மக்களின் உயிரை பறித்த வருத்தகரமான சம்பவமாக மாறியுள்ளது. இந்த கார் பந்தயத்தில் போலீஸ் அதிகாரியின் மகன் உட்பட இருவர் ஈடுபட்டிருந்தனர்.
சம்பவம் கடந்த வாரம் மாலை 4 மணியளவில், பாவ்நகர் மாவட்டத்தின் கலியாபீட் பகுதியில் நடைபெற்றது. நெரிசலான சாலையில் வெள்ளை நிற கிரெட்டா மற்றும் சிவப்பு நிற பிரெஸ்ஸா கார்களில் இருவரும் வேகப்பந்தயத்தில் ஈடுபட்டனர். அந்தக் கார்களில் வெள்ளை நிற கிரெட்டா, மணிக்கு 120-150 கிலோமீட்டர் வேகத்தில் சென்றதாக தெரிவிக்கப்படுகிறது.
அந்நேரத்தில், கிரெட்டா கார் கட்டுப்பாட்டை இழந்தது. இதனால், சாலையில் நடந்து சென்ற 30 வயது பார்கவ் பட் மற்றும் 65 வயது சாம்பாபென் வச்சானி ஆகியோர் மீது மோதியது, இதனால் அவர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
கார் பின்னர் அருகில் சென்ற இருசக்கர வாகனத்தையும் மோதி சேதப்படுத்தியது. இந்த விபத்தில் இருசக்கர வாகனத்தில் பயணித்த இருவரும் காயமடைந்தனர். மேலும், பல வாகனங்கள் சேதமடைந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
பாதிக்கப்பட்ட பார்கவ் பட்டுக்கு கடந்த ஆண்டுதான் திருமணம் நடைபெற்றது என்பது மேலும் வேதனையை ஏற்படுத்தியுள்ளது.
விபத்தை ஏற்படுத்தியவரின் பெயர் ஹர்ஷ்ராஜ் சிங் கோஹில் (20) என கண்டறியப்பட்டுள்ளது. இவர், பாவ்நகர் குற்றப்பிரிவில் உதவி துணை ஆய்வாளராக பணியாற்றும் அனிருத்தா சிங் வஜுபா கோஹிலின் மகனாவார். இந்த சம்பவம் சிசிடிவி கேமராக்களில் பதிவாகியுள்ளதால், முக்கிய ஆதாரங்களுடன் போலீசார் விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.