நகைப்பட்டறையில் 1 கிலோ தங்கம் கொள்ளை 2 பேர் கோவையில் கைது!

கோவை, சாமி அய்யர் வீதியில் உள்ள நகைப்பட்டறையை உடைத்து, 1 கிலோ தங்க நகைகளைக் கொள்ளையடித்த வழக்கில், கணுவாய் பகுதியைச் சேர்ந்த முக்கியக் கொள்ளையர்கள் இருவரை, கோவைக் காவல்துறையினர் விரைந்து செயல்பட்டுக் கைது செய்துள்ளனர். இவர்கள் இருவரும் சாக்கடைகளில் இருந்து தங்கத் துகள்களைச் சேகரிக்கும் தொழிலில் ஈடுபட்டு வந்துள்ளனர் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. கோவை, வடவள்ளியைச் சேர்ந்த நவநீதகிருஷ்ணன் என்பவர், கோவை, சாமி அய்யர் வீதியில் நகைப்பட்டறை நடத்தி வருகிறார். இவரது பட்டறையின் பூட்டை உடைத்து உள்ளே நுழைந்த மர்ம நபர்கள், மரப்பெட்டியில் வைக்கப்பட்டிருந்த சுமார் 1 கிலோ எடையுள்ள தங்க நகைகளைக் கொள்ளையடித்துச் சென்றனர். இது குறித்து நவநீதகிருஷ்ணன் அளித்த புகாரின் பேரில், வெரைட்டிஹால் ரோடு காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரித்தனர். கொள்ளையர்களை விரைந்து பிடிக்க, காவல் உதவி ஆணையர் தலைமையில் ஐந்து தனிப்படைகள் அமைக்கப்பட்டன.

தனிப்படையினர் அப்பகுதியில் உள்ள கண்காணிப்புக் கேமராப் பதிவுகளை ஆய்வு செய்தனர். அதில், இரு நபர்கள் நகைகள் இருந்த மரப்பெட்டியைத் தூக்கிச் சென்றது தெளிவாகத் தெரியவந்தது. இதையடுத்து, தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்ட போலீசார், கொள்ளையர்கள் இருவரும் கணுவாய் பகுதியில் பதுங்கி இருப்பதாகக் கிடைத்த ரகசியத் தகவலின் அடிப்படையில் அவர்களைச் சுற்றி வளைத்துக் கைது செய்தனர். காவல்துறையின் விசாரணையில், கைதானவர்கள் கோவையைச் சேர்ந்த முருகன் (வயது 45) மற்றும் அவரது மைத்துனர், தூத்துக்குடியைச் சேர்ந்த சின்னதுரை (வயது 32) எனத் தெரியவந்தது. முருகன்: இவர் ஏற்கனவே கோவை ஆர்.எஸ்.புரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் ஒரு நகைப்பட்டறையை உடைத்து, 500 கிராம் தங்க நகைகளைத் திருடிய வழக்கில் சிக்கியவர். சின்னதுரை: இவர் மீதும் தூத்துக்குடி மாவட்டத்தில் மூன்று வழக்குகள் நிலுவையில் உள்ளன.

இவர்கள் இருவரும் நகைத் தொழில் நடைபெறும் பகுதிகளிலுள்ள சாக்கடைகளில் இருந்து தங்கத் துகள்களைச் சேகரித்து விற்பனை செய்து வந்ததும் விசாரணையில் தெரியவந்தது.  காவல்துறையினர், கொள்ளையர்கள் இருவரையும் சிறையில் அடைத்து, கொள்ளையடிக்கப்பட்ட 1 கிலோ தங்க நகைகளை மீட்கும் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.

Exit mobile version