2018 ஆம் ஆண்டு திருச்சி விமான நிலையத்தில் மதிமுக மற்றும் நாம் தமிழர் கட்சியினருக்கு இடையே ஏற்பட்ட மோதலைத் தொடர்ந்து பதிவு செய்யப்பட்ட வழக்கில், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் உள்ளிட்ட 19 பேர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். இந்த தீர்ப்பு திருச்சி இரண்டாவது கூடுதல் மாவட்ட நீதிமன்றம் இன்று வழங்கியது.
2018 மே 19ஆம் தேதி, மதிமுக பொதுச்செயலாளர் வைகோ திருச்சி விமான நிலையம் வந்தபோது, அவர் சென்ற பிறகு விமான நிலையத்தில் இருந்த நாம் தமிழர் கட்சியினர் கூச்சலிட்டதாக கூறப்படுகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த மதிமுகவினருடன் ஏற்பட்ட வாய்த்தகராறு மோதலாக மாறியதாக தெரிவிக்கப்பட்டது.
இரு தரப்பினரும் கொடிக்கம்பங்களால் தாக்கிக்கொண்டதாகக் கூறப்பட்ட நிலையில், இரு கட்சியினரும் மீது விமான நிலைய காவல்துறை புகார் பதிவு செய்தது. பொதுமக்களுக்கு இடையூறு ஏற்பட்டதாகவும் கூறப்பட்ட இந்த வழக்கு, கடந்த 7 ஆண்டுகளாக விசாரணையில் இருந்தது.
இந்த வழக்கு திருச்சி இரண்டாவது கூடுதல் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. ஜூலை 16ஆம் தேதி சீமான் நேரில் ஆஜரானார். வழக்கு விசாரணை நிறைவடைந்த நிலையில், இன்று நீதிபதி கோபிநாத் தீர்ப்பு வழங்கினார்.
தீர்ப்பில், குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படவில்லை என்பதால் சீமான் உட்பட 19 பேரும் வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.