இலங்கைக்கு கடத்த முயன்ற 173 கிலோ கஞ்சா பறிமுதல்

ராமநாதபுரம் மாவட்டம் தேவிபட்டினம் அருகே கடலோரத்தில், நாட்டுப்படகு மூலம் இலங்கைக்கு கடத்த முயன்ற 173 கிலோ கஞ்சா மரைன் போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்டது.

தொண்டி, பாசிபட்டினம், மோர்பண்ணை, சோழியாக்குடி, மணக்குடி உள்ளிட்ட கடற்கரைகளில் இருந்து கஞ்சா கடத்தப்படும் முயற்சி நடப்பதாக கிடைத்த தகவலின் பேரில், மணக்குடி அருகே உள்ள ஓடகரை முனியப்பன் கோவில் பின்புற கடற்கரையில் மரைன் போலீசார் ரோந்துப் பணியில் ஈடுபட்டனர்.

அப்போது சந்தேகத்துக்கிடமான ஒரு சரக்கு வாகனத்தை நிறுத்தி சோதனை செய்தபோது, மூன்று சாக்கு மூட்டைகளில் மறைவாக பதுக்கி வைக்கப்பட்டிருந்த கஞ்சா பொட்டலங்கள் கண்டுபிடிக்கப்பட்டன.

வாகனத்தை ஓட்டி வந்தவராக புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடி பகுதியைச் சேர்ந்த ராஜமாணிக்கம் (61) கைது செய்யப்பட்டார். விசாரணையில், இந்த கஞ்சா பொட்டலங்களை நாட்டுப்படகு மூலம் கடல் வழியாக இலங்கைக்கு கடத்துவதற்காக கொண்டு வந்ததாகவும், மேலும் சில கஞ்சா பொட்டலங்கள் மணமேல்குடி பகுதியில் உள்ள அவரது வீட்டில் இருப்பதாகவும் தெரிவித்தார்.

பின்னர், வாகனத்திலிருந்து 90 கிலோ மற்றும் அவரது வீட்டிலிருந்து 83 கிலோ என மொத்தம் 173 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டு, தேவிபட்டினம் காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டது. பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சாவின் மதிப்பு ரூ.26 லட்சம் இருக்கும் என மரைன் போலீசார் தெரிவித்தனர்.

Exit mobile version