சுற்றுச்சூழல் விழிப்புணர்வை வலியுறுத்தி, மேட்டுப்பாளையத்திலிருந்து சேலம் வரை 170 கிலோமீட்டர் தூரம் தொடர்ந்து நடந்து, 49,000 விதைப்பந்துகளைத் தூவி சாதனை படைத்துள்ளார் அரசுப் போக்குவரத்து கழக நடத்துனர் டி. அறிவழகன். கோவை மாவட்டம் சிறுமுகையைச் சேர்ந்த டி. அறிவழகன், தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகத்தின் கோவை மண்டலத்தில் நடத்துனராகப் பணியாற்றி வருகிறார். தமிழக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் 49-வது பிறந்தநாளை முன்னிட்டு, மேட்டுப்பாளையம் நகர உதயநிதி ஸ்டாலின் நற்பணி மன்றம் சார்பில் இச்சாதனை நிகழ்வு ஒருங்கிணைக்கப்பட்டது.
கடந்த 4-ஆம் தேதி மேட்டுப்பாளையத்தில் தனது பயணத்தைத் தொடங்கிய அறிவழகன், சேலம் வரையிலான 170 கி.மீ. தொலைவை நடைபயணமாகவே கடந்தார். இந்தப் பயணத்தின் சிறப்பம்சமாக, “பசுமை விழிப்புணர்வு” ஏற்படுத்தும் நோக்கில், வழிநெடுகிலும் சுமார் 49,000 விதைப்பந்துகளை நட்டுக்கொண்டே சென்று தனது இலக்கை வெற்றிகரமாக அடைந்தார்.
அறிவழகனின் இந்த அசாத்திய முயற்சி மற்றும் சமூக விழிப்புணர்வுப் பணியைப் பாராட்டி, “நோபுல் புக் ஆஃப் வேர்ல்ட் ரெக்கார்ட்ஸ்” (Noble Book of World Records) நிறுவனம் இதனைப் புதிய உலக சாதனையாக அங்கீகரித்துள்ளது. இதற்கான பதக்கம் மற்றும் சான்றிதழ் அவருக்கு வழங்கப்பட்டது.
உலக சாதனை படைத்த நடத்துனர் அறிவழகன், கோவை அரசுப் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குனர் கணபதி, பொது மேலாளர் கே. செல்வக்குமார், மாவட்ட வன அலுவலர் என். ஜெயராஜ், மாவட்ட விளையாட்டு அலுவலர் புவனேஸ்வரி மற்றும் கோவை மாநகராட்சி துணை மேயர் வெற்றிச்செல்வன் ஆகியோரை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார். அரசுப் பணியில் இருந்துகொண்டு, சுற்றுப்புறச் சூழல் மீதான அக்கறையுடன் இத்தகைய கடினமான சாதனையைப் புரிந்துள்ள அறிவழகனுக்குப் பல்வேறு தரப்பிலிருந்தும் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

















