ஆந்திராவில் கருக்கலைப்பு செய்யப்பட்டதால் உடல்நலம் பாதிக்கப்பட்ட 17 வயது சிறுமி, திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு வட்டத்தைச் சேர்ந்த கூலித் தொழிலாளியின் 17 வயது மகள், நர்சிங் படித்து வந்தார். இவரும், உறவினரான 17 வயது சிறுவனும் சில மாதங்களுக்கு முன்பு வீட்டை விட்டு வெளியேறினர். இதுகுறித்து பெற்றோர் அளித்த புகாரின் பேரில், பொதட்டூர்பேட்டை போலீசார் சிறுவன் மீது போக்சோ வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
இதற்கிடையில், சிறுவன் குடும்பத்தினர் இருவரையும் மீண்டும் வீட்டிற்கு அழைத்து வந்ததாக கூறப்படுகிறது. அப்போது, 5 மாத கர்ப்பிணியாக இருந்த சிறுமிக்கு, ஆந்திர மாநிலம் பண்ணூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் கருக்கலைப்பு செய்யப்பட்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர். பின்னர் உடல்நலம் பாதிக்கப்பட்ட சிறுமி, திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
14 நாட்கள் மருத்துவ கண்காணிப்பில் சிகிச்சை பெற்ற அவர், உயிரிழந்தார். இதையடுத்து, கருக்கலைப்பு செய்ததாகக் கூறப்படும் ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த செவிலியர் வயலட் கனி மற்றும் ஹரிபாபு ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேலும், சிறுமிக்கு கர்ப்பத்திற்கு காரணமான சிறுவனையும், அவரது பெற்றோரையும் தேடி போலீசார் வலைவீசி வருகின்றனர்.