வாக்குத் திருட்டு நடந்ததாக குற்றம்சாட்டிய இந்தியா கூட்டணி எம்.பி.க்கள், நேற்று நாடாளுமன்றத்தில் இருந்து தேர்தல் ஆணையம் நோக்கி பேரணி செல்ல முயன்ற போது தடுத்து நிறுத்தப்பட்டு கைது செய்யப்பட்டனர்.
இந்நிலையில், இன்று அவர்கள் பிகார் வரைவு வாக்காளர் பட்டியலில் இடம்பெற்ற 124 வயது பெண் மிந்தா தேவி தொடர்பாக போராட்டம் நடத்தினர். போராட்டத்தில் பங்கேற்ற எம்.பி.க்கள், மிந்தா தேவியின் புகைப்படம் மற்றும் பெயர் அச்சிடப்பட்ட டி-ஷர்ட்டுகளை அணிந்திருந்தனர். அந்த டி-ஷர்ட்டின் பின்புறத்தில் “124 நாட் அவுட்” எனும் வாசகமும் இடம் பெற்றிருந்தது.
வரவிருக்கும் பிகார் சட்டமன்றத் தேர்தலையொட்டி, அங்குள்ள வாக்காளர் பட்டியலில் திருத்தப் பணியை தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வருகிறது. இந்த செயல்முறையில், குடிபெயர்ந்தவர்கள், இருமுறை வாக்குச் சாவடியில் பெயர் வைத்தவர்கள், மரணமடைந்தவர்கள் உள்ளிட்ட சுமார் 65 லட்சம் நபர்களின் பெயர்கள் நீக்கப்பட்டன.
இதனையடுத்து வெளியிடப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியலில், மிந்தா தேவி என்ற பெண்ணின் வயது 124 என்றும், அவர் முதல் முறையாக வாக்களிக்க இருப்பதாகவும் குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்த விவகாரத்தை முன்னிறுத்தி போராட்டம் நடத்திய காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர், “ராஜீவ் குமார், ஞானேஷ் குமார் ஆகியோர் தலைமையில் உள்ள இந்திய தேர்தல் ஆணையம், பாஜகவின் பிரிவாக மாறியுள்ளது. 124 வயது மிந்தா தேவி சம்பவம், தேர்தல் ஆணையத்தின் தோல்வியை வெளிப்படுத்தும் உதாரணமாகும்” எனக் குற்றம்சாட்டினார்.