உலகின் வயதான மாரத்தான் ஓட்டப்பந்தய வீரராகப் பரிசீலிக்கப்பட்டவர் ஃபெளஜா சிங் (வயது 114), சாலை விபத்தில் மரணமடைந்துள்ளார். ‘டர்பனட் டொர்னாடோ’ மற்றும் ‘சீக்கிய சூப்பர்மேன்’ என அழைக்கப்படும் இவர், கடந்த 15ஆம் தேதி ஜலந்தர்-பதான்கோட் நெடுஞ்சாலையில் உள்ள தனது பியாஸ் கிராமம் அருகே சாலையை கடக்க முயன்ற போது, வேகமாக வந்த கார் ஒன்று மோதியதால் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் உயிரிழந்தார்.
இந்த ஹிட் அண்ட் ரன் சம்பவத்துடன் தொடர்புடையதாகக் கருதப்பட்ட 30 வயதான கனடா நாட்டு நபர் அம்ரித்பால் சிங், இன்று பஞ்சாப் போலீசால் கைது செய்யப்பட்டுள்ளார்.
விபத்தின் பின்னணி:
முதற்கட்ட விசாரணையில், அம்ரித்பால் சிங் ஜலந்தர் மாவட்டத்தில் உள்ள தாசுபூர் கிராமத்தைச் சேர்ந்தவர் என்பதும், எட்டு நாட்களுக்கு முன்பு கனடாவிலிருந்து இந்தியா வந்ததும் தெரியவந்துள்ளது. மேலும், அவர் சமீபத்தில் கபுர்தலா மாவட்டத்தைச் சேர்ந்த ஒருவரிடம் இருந்து வெள்ளை நிற டொயோட்டா ஃபார்ச்சூனர் காரை வாங்கியதும் உறுதி செய்யப்பட்டுள்ளது.
சிசிடிவி ஆதாரத்தில் கைது:
26 வயதான அம்ரித்பால், போக்பூர் பகுதியிலிருந்து கிஷாகர்க்கு காரில் பயணித்தபோதே விபத்து நடந்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது. சிசிடிவி காட்சிகளின் உதவியுடன் விசாரணை மேற்கொண்ட போலீசார், அவர் கிராமத்தில் பதுங்கியிருந்ததை கண்டறிந்து கைது செய்தனர்.
“அவர் ஃபெளஜா சிங் என்பது தெரியாது” – கைது செய்யப்பட்டவர் விளக்கம்:
“மோதியவர் உலகப்புகழ் பெற்ற மாரத்தான் வீரர் ஃபெளஜா சிங் என்பது விபத்துப் பிறகு ஊடகங்களில் வந்த செய்திகளில்தான் எனக்கு தெரியவந்தது,” என அம்ரித்பால் சிங் தெரிவித்துள்ளார்.
மூத்த வீரரின் ஊக்கமூட்டும் பயணம்:
ஃபெளஜா சிங், தனது ஐந்தாவது மகன் குல்தீப் சிங்கை இழந்த துக்கத்தை சமாளிக்க ஓட்டத்தைத் துவக்கியவர். பின்னர், லண்டன், டொராண்டோ மற்றும் நியூயார்க் ஆகிய நகரங்களில் நடைபெற்ற 42 கிலோமீட்டர் மாரத்தான் போட்டிகளில் பங்கேற்றுள்ள இவர், உலகின் வயதான தடகள வீரராக வரலாற்றில் பெயர் பதித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.