ஆண்டிபட்டி :
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே, 11 வயது சிறுமி பாலியல் தொந்தரவுக்கு உள்ளானது தொடர்பான புகாரில், 20 நாட்கள் கடந்தும் குற்றவாளி கைது செய்யப்படவில்லை என கூறி சிறுமியின் பெற்றோர் வேதனை வெளியிட்டுள்ளனர்.
மலை கிராமத்தைச் சேர்ந்த சிறுமிக்கு, எதிர்வீட்டில் வசிக்கும் 52 வயதான நபர் பாலியல் தொல்லை அளித்ததாக புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து ஆண்டிபட்டி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பெற்றோர் புகார் அளித்துள்ளனர். புகாரின் பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டும், இதுவரை குற்றவாளி கைது செய்யப்படவில்லை என புகார் கூறப்படுகிறது.
இதுகுறித்து பெற்றோர், தேனி மாவட்ட ஆட்சியரிடம் மற்றும் ஆண்டிபட்டி துணை காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திலும் மனு அளித்துள்ளனர். மேலும், சம்பந்தப்பட்ட நபரிடம் கேள்வி எழுப்பிய சிறுமியின் தந்தை, குற்றவாளி மற்றும் அவரது உறவினர்களால் தாக்கப்பட்டதாகவும், அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றதாகவும் கூறப்படுகிறது.
“சிறுமிக்கு நேர்ந்த பாலியல் தொந்தரவுக்கு நீதி கிடைக்க வேண்டும். குற்றவாளி உடனடியாக கைது செய்யப்பட வேண்டும்” என பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.