திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை அடுத்துள்ள தென்னம்பட்டியில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற சவடம்மன் மலைக்கோயிலில், 2026 ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு உலக நன்மை வேண்டியும், மழை பொழிந்து விவசாயம் செழிக்கவும் 108 சங்காபிஷேக விழா மிகச்சிறப்பாக நடைபெற்றது. விழாவினை முன்னிட்டு அதிகாலை முதலே கோயில் வளாகத்தில் யாக சாலை பூஜைகள் கணபதி ஹோமத்துடன் தொடங்கி நடைபெற்றன. இதனைத் தொடர்ந்து, கங்கை, காவேரி உள்ளிட்ட பல்வேறு புண்ணிய நதிகளில் இருந்து கொண்டு வரப்பட்ட புனித தீர்த்தங்கள் கலசங்களில் வைக்கப்பட்டு விசேஷ பூஜைகள் செய்யப்பட்டன.
யாக சாலை பூஜைகளின் பூர்ணாஹுதிக்குப் பின்னர், ஓதுவா மூர்த்திகள் மந்திரங்கள் முழங்க, 108 சங்குகளில் நிரப்பப்பட்ட புனித தீர்த்தங்கள் கொண்டு மூலவர் சவடம்மனுக்கு மகா சங்காபிஷேகம் நடைபெற்றது. பின்னர் அம்மனுக்கு புஷ்ப மற்றும் சொர்ண அலங்காரங்கள் செய்யப்பட்டு மகா தீபாராதனை காட்டப்பட்டது. இந்த ஆன்மீக வைபவத்தைக் காண சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் திரண்டு வந்து சுவாமி தரிசனம் செய்தனர். சவடம்மன் மலைக்கோயில் பூஜைகளைத் தொடர்ந்து, அதே வளாகத்தில் அமைந்துள்ள நந்தீஸ்வரர் கோயில் மந்தை செல்வவிநாயகர், பாலமுருகன், நந்தீஸ்வரன், மதவானையம்மன் மற்றும் ஆலம்மன் ஆகிய கோயில்களிலும் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் மற்றும் வழிபாடுகள் விமரிசையாக நடந்தன.
இந்த விழாவின் ஒரு முக்கிய அங்கமாக, கோயில் பகுதியில் இயற்கையாகவே ஒன்றிணைந்து வளர்ந்திருந்த அரசு மற்றும் வேம்பு மரங்களுக்கு மங்கல நாண் பூட்டி திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது. ஆன்மீக ரீதியாக அரச மரம் மகாவிஷ்ணுவின் அம்சமாகவும், வேப்ப மரம் மகாலட்சுமி அல்லது பராசக்தியின் அம்சமாகவும் போற்றப்படுகிறது. இவ்விரு விருட்சங்களும் இணைந்து வளர்ந்திருக்கும் இடத்தில் திருக்கல்யாணம் நடத்தி வழிபடுவது திருமணத் தடைகளை நீக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாகும். விழாவில் பங்கேற்ற பக்தர்களுக்கு அன்னதானம் மற்றும் பிரசாதங்கள் வழங்கப்பட்டன. இதற்கான ஏற்பாடுகளை கோயில் அறங்காவலர் குழுவினர் மற்றும் தென்னம்பட்டி கிராம பொதுமக்கள் இணைந்து செய்திருந்தனர்.
