2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டுத் தமிழக வாக்காளர் பட்டியலில் முறைகேடுகள் நடப்பதாகத் தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் அவர்கள் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளார். குறிப்பாக, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வெற்றி பெற்ற கொளத்தூர் சட்டமன்றத் தொகுதியிலேயே 10,000 ஓட்டுக்கள் இறந்தவர்களின் பெயரில் உள்ளதாக அவர் பரபரப்பு குற்றச்சாட்டைக் கூறியுள்ளார்.
தென்காசியில் செய்தியாளர்களைச் சந்தித்த தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் கூறியதாவது:
“வரும் 2026 ஆம் ஆண்டுச் சட்டமன்றத் தேர்தலில் எடப்பாடி கே. பழனிசாமி தலைமையில் மக்களின் ஆதரவுடன் சிறந்த ஆட்சி அமையும். தற்போது ஆளுங்கட்சியான தி.மு.க.வினர், ‘எஸ்ஐஆர்’- ஐ வைத்துக் கொண்டு மக்களைக் குழப்பி, அவர்கள் தமது வேலைகளைப் பார்த்துக் கொண்டிருக்கின்றனர். வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகள் குறித்து நாங்கள் தீவிரமாக ஆய்வு செய்து வருகிறோம்.
பீஹார் மாநிலத்தில் 65 லட்சம் ஓட்டுக்கள் நீக்கப்பட்டதைப் போல, தமிழகத்திலும் சுமார் 75 லட்சம் ஓட்டுக்கள் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்படும் எனத் தெரிய வருகிறது. இதில் பெரும்பாலும் 2002 ஆம் ஆண்டுக்கு பின்னர் இறந்தவர்களின் ஓட்டுக்களே இருக்கும்.
உதாரணமாக, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நின்று வெற்றி பெற்ற கொளத்தூர் தொகுதியில் மட்டும் 10,000 ஓட்டுக்கள் இறந்தவர்களின் பெயரில் உள்ளது. இந்தக் கள்ள ஓட்டுக்களை நீக்குவதற்கு ஆளுங்கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். வாக்காளர் பட்டியலில் உள்ள முறைகேடுகளைத் தேர்தல் ஆணையம் களைய வேண்டும்,” என்று அவர் கூறியுள்ளார்.
முதலமைச்சரின் சொந்தத் தொகுதியிலேயே இவ்வளவு பெரிய அளவில் இறந்தவர்களின் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் நீடிப்பதும், அவற்றை நீக்க ஆளுங்கட்சி எதிர்ப்புத் தெரிவிப்பதும் முறைகேடுகளை ஊக்குவிப்பதாக உள்ளது என பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் அவர்கள் குற்றம் சாட்டியிருப்பது அரசியல் களத்தில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
