வாஷிங்டன் : அமெரிக்க அதிபராக டொனால்ட் டிரம்ப் மீண்டும் பொறுப்பேற்ற பிறகு தொடர்ச்சியாக பல கடுமையான வர்த்தக அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார். அதன்படி, அக்டோபர் 1 முதல் அமெரிக்காவுக்குள் இறக்குமதி செய்யப்படும் காப்புரிமை பெற்ற மற்றும் பிராண்டட் மருந்துப் பொருட்களுக்கு 100 சதவீத வரி விதிக்கப்படும் என்று அவர் அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக, “மருந்து உற்பத்தி நிறுவனங்கள் அமெரிக்காவிலேயே தங்கள் ஆலைகளை அமைத்தால் அல்லது அதற்கான கட்டுமானப் பணிகளைத் தொடங்கியிருந்தால், அவர்களுக்கு வரிவிலக்கு வழங்கப்படும்” என டிரம்ப் சமூக வலைதளத்தில் பதிவு செய்துள்ளார்.
இந்தியாவுக்கு நேரும் பாதிப்பு
ஏற்கெனவே, இந்தியா மற்றும் அமெரிக்கா இடையிலான வர்த்தக ஒப்பந்தம் இல்லாததால் 50% வரி விதிக்கப்பட்ட நிலையில், மருந்துப் பொருட்களுக்கு தனியே 100% வரி விதிப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதனால், இந்திய மருந்துத் துறைக்கு பெரிய தாக்கம் ஏற்படும் என நிபுணர்கள் கூறுகின்றனர்.
2024 ஆம் ஆண்டில், இந்தியா அமெரிக்காவுக்கு 3.6 பில்லியன் டாலர் மதிப்பிலான மருந்துப் பொருட்களை ஏற்றுமதி செய்தது. நடப்பு ஆண்டின் முதல் பாதியில் மட்டும் 3.7 பில்லியன் டாலர் ஏற்றுமதி செய்துள்ள நிலையில், புதிய வரி சுமை இந்தியாவின் மருந்து நிறுவனங்களுக்கு கடும் சவாலாக அமையும்.
அரசாங்க தரவுகளின்படி, FY25 இல் இந்தியாவின் மருந்து ஏற்றுமதி 9.4% உயர்ந்து 30.46 பில்லியன் டாலராக இருந்தது. அதில் சுமார் 40% அமெரிக்காவிற்கே சென்றுள்ளது. ஜெனரிக் மருந்துகள் மலிவு விலையில் கிடைப்பதற்கான முக்கிய ஆதாரமாக இந்தியா இருந்த நிலையில், 100% வரி விதிப்பு அமலுக்கு வந்தால், அமெரிக்காவில் விலை உயர்வு தவிர்க்க முடியாததாக இருக்கும். இதனால் தேவையும் குறைய வாய்ப்பு உள்ளது என்று பொருளாதார நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
பிற பொருட்களுக்கும் கூடுதல் வரி
மருந்துப் பொருட்கள் தவிர, கனரக லாரிகள், மெத்தை தளபாடங்கள், சமையலறை அலமாரிகள் மற்றும் குளியலறை வேனிட்டிகள் போன்றவற்றுக்கும் அக்டோபர் 1 முதல் புதிய வரி விதிக்கப்படும் என வெள்ளை இல்லம் அறிவித்துள்ளது.