100 நாள் வேலைத் திட்டப் பெயர் மாற்றம் : ஒன்றிய அரசின் சர்வாதிகார போக்கு – தி.வேல்முருகன் கண்டனம்

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதிச் சட்டத்தின் பெயரை மாற்ற ஒன்றிய அரசு மேற்கொண்டு வரும் முயற்சி, ஜனநாயகத்துக்கு எதிரான சர்வாதிகார நடவடிக்கை என தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் தி.வேல்முருகன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தற்போது நடைபெற்று வரும் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடரில், தனது பெரும்பான்மை பலத்தை பயன்படுத்தி மக்கள் விரோதமான பல்வேறு சட்டங்களை கொண்டு வர பாஜக தலைமையிலான ஒன்றிய அரசு திட்டமிட்டு வருவதாக குற்றம்சாட்டியுள்ளார். புதிய விதைகள் சட்டம், மின்சாரச் சட்டம், பொதுக் காப்பீட்டு துறையில் 100 சதவீத அந்நிய முதலீடு, அணுசக்தித் திட்டங்களில் வெளிநாட்டு நிறுவனங்களை அனுமதிப்பது போன்ற முடிவுகள் அதில் அடங்கும் என தெரிவித்துள்ளார்.

குறிப்பாக, கோடிக்கணக்கான கிராமப்புற மக்களுக்கு வாழ்வாதாரமாக உள்ள மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதிச் சட்டத்தை மாற்றும் முயற்சியில் ஒன்றிய அரசு ஈடுபட்டுள்ளதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார். அந்தச் சட்டத்தின் பெயரை மாற்றி, மகாத்மா காந்தியின் பெயரை நீக்கி புதிய பெயர் சூட்ட முடிவு செய்திருப்பது, தேசத் தந்தை மீது ஒன்றிய அரசுக்கு உள்ள விரோத மனப்பான்மையை வெளிப்படுத்துவதாக அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், அந்தச் சட்டத்தில் உள்ள ‘உறுதிச் சட்டம்’ என்ற அடிப்படை அம்சத்தை நீக்கி, வெறும் ‘வேலை வாய்ப்பு’ என்ற வார்த்தையை பயன்படுத்த ஒன்றிய அரசு திட்டமிட்டுள்ளதாக கூறியுள்ளார். இதன் மூலம், ஒரு குடும்பத்திற்கு ஆண்டுக்கு 100 நாட்கள் வேலை வழங்கப்பட வேண்டும் என்ற சட்ட உரிமை பறிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக எச்சரித்துள்ளார்.

நூறுநாள் வேலைத் திட்டத்தை நம்பி வாழும் கோடிக்கணக்கான ஏழை மக்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் இந்த நடவடிக்கை, பெரும்பான்மை மக்களுக்கு எதிரான அரசின் உண்மையான முகத்தை வெளிச்சம் போட்டுக் காட்டுவதாகவும் அவர் விமர்சித்துள்ளார்.

எனவே, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதிச் சட்டத்தின் பெயரை மாற்ற முயலும் மோடி தலைமையிலான ஒன்றிய அரசின் நடவடிக்கைகளை எதிர்த்து, அனைத்து ஜனநாயக சக்திகளையும் மற்றும் எதிர்க்கட்சிகளையும் ஒருங்கிணைத்து தமிழ்நாடு அரசு முன்வர வேண்டும் என தமிழக வாழ்வுரிமைக் கட்சி வலியுறுத்தியுள்ளது.

Exit mobile version