மஹாராஷ்டிராவில் தனியார் துறையில் பணிபுரியும் ஊழியர்களின் பணி நேரத்தை அதிகபட்சமாக 10 மணி நேரமாக உயர்த்தும் திட்டத்தை மாநில அரசு பரிசீலித்து வருகிறது.
நேற்றைய அமைச்சரவை கூட்டத்துக்கு முன்னதாக தொழிலாளர் துறையின் சார்பில் ஒரு பரிந்துரை சமர்ப்பிக்கப்பட்டது. அதில், தனியார் துறையில் எந்த வயதுடைய பணியாளரும் ஒரு நாளில் அதிகபட்சமாக 10 மணி நேரம் வரை மட்டுமே வேலை செய்ய வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது. அவசர சூழ்நிலை அல்லது முக்கிய பணிகள் இருந்தால், இந்த நேரம் 12 மணி நேரமாக நீட்டிக்கப்படலாம் என்றும் பரிந்துரை கூறுகிறது.
மேலும், ஒரு ஊழியர் தொடர்ந்து 6 மணி நேரம் பணிபுரிந்தால், அவருக்கு 30 நிமிட இடைவேளை வழங்கப்பட வேண்டும். தற்போது வழங்கப்பட்ட இடைவேளை 5 மணி நேர பணிக்குப் பிறகே கிடைக்கிறது.
அத்துடன், 3 மாதங்களுக்கு உள்ள கூடுதல் பணிநேர வரம்பு 125 மணிநேரமாக இருந்து வந்த நிலையில், அதை 144 மணிநேரமாக உயர்த்தும் யோசனையும் பரிந்துரையில் இடம்பெற்றுள்ளது.
இந்த நடைமுறை அமல்படுத்தப்பட்டால், 20 மற்றும் அதற்கு மேற்பட்ட ஊழியர்களைக் கொண்ட தனியார் நிறுவனங்களுக்கு இது கட்டாயமாகும்.