1 டிகிரி: மூணாறில் உறைபனிப் போர்வை – நடுங்கும் மக்கள், உற்சாகத்தில் சுற்றுலாப் பயணிகள்!

கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் உள்ள உலகப்புகழ் பெற்ற சுற்றுலாத் தலமான மூணாறில், இந்த ஆண்டு கடும் குளிரும் உறைபனியும் வழக்கத்திற்கு மாறாக முன்கூட்டியே தொடங்கி பொதுமக்களை உறைய வைத்துள்ளது. பொதுவாக நவம்பர் மாத இறுதியில் குளிர் காலம் தொடங்கி, டிசம்பர் மற்றும் ஜனவரி மாதங்களில் உச்சத்தை எட்டுவது வழக்கம். கடந்த ஆண்டு டிசம்பர் 24-ஆம் தேதிதான் முதல் உறைபனி பதிவான நிலையில், இந்த ஆண்டு பருவநிலை மாற்றத்தின் காரணமாக டிசம்பர் 15-ஆம் தேதியே உறைபனித் தாக்கம் தொடங்கியது. தற்போது வெறும் ஆறு நாட்கள் இடைவெளியில் மீண்டும் உறைபனி ஏற்பட்டுள்ளதால், மூணாறு நகரம் மற்றும் அதன் சுற்றுவட்டார எஸ்டேட் பகுதிகளில் கடும் குளிர் நிலவுகிறது. குறிப்பாக நேற்று காலை மூணாறு டவுன், செண்டுவாரை, சைலன்ட்வாலி, லெட்சுமி மற்றும் கன்னிமலை எஸ்டேட் பகுதிகளில் வெப்பநிலை 0 டிகிரி செல்சியஸாகப் பதிவானது. இதில் உச்சகட்டமாகச் சிவன்மலை எஸ்டேட் பகுதியில் வெப்பநிலை -1°C ஆகக் குறைந்ததால், அப்பகுதி முழுவதும் வெள்ளை நிறப் பனிப் போர்வை போர்த்தியது போலக் காட்சியளித்தது.

இந்தக் கடுங்குளிரால் தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள் மற்றும் உள்ளூர் மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. அதிகாலையிலேயே வேலைக்குச் செல்லும் தொழிலாளர்கள், கடும் குளிரைத் தாங்க முடியாமல் தீ மூட்டி குளிர் காயும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். புல்வெளிகள், வாகனங்களின் கண்ணாடிகள் மற்றும் தேயிலைச் செடிகளின் மீது பனித் துளிகள் உறைந்து காணப்படுவதால், பயிர்கள் கருகும் அபாயமும் உள்ளதாக விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர். இருப்பினும், இந்த இயற்கை மாற்றத்தைக் கண்டு மூணாறிற்கு வருகை தந்துள்ள சுற்றுலாப் பயணிகள் பெரும் உற்சாகமடைந்துள்ளனர். அதிகாலையிலேயே பனி மூடிய மலைச்சரிவுகளைப் புகைப்படம் எடுத்தும், உறைபனியைத் தொட்டு ரசித்தும் அவர்கள் மகிழ்ந்து வருகின்றனர். அடுத்த சில நாட்களுக்கு இதே நிலை நீடிக்கும் என எதிர்பார்க்கப்படுவதால், சுற்றுலாப் பயணிகளின் வருகை மேலும் அதிகரிக்கும் எனக் கணிக்கப்பட்டுள்ளது. அதே வேளையில், முன்கூட்டியே உறைபனி தொடங்கியிருப்பது உலகளாவிய பருவநிலை மாற்றத்தின் அறிகுறியாக இருக்கலாம் எனச் சூழலியல் ஆர்வலர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

Exit mobile version