பிரேசிலிய சீரி ஏ கால்பந்து தொடரில், சாண்டோஸ் அணி 0-6 என்ற கணக்கில் வாஸ்கோ அணியிடம் படுதோல்வி கண்டது. இந்தப் போட்டியில் ஒரு கோலும் அடிக்க முடியாமல் துவண்ட நெய்மர், மைதானத்திலேயே கண்ணீர் விட்டது ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
சாண்டோஸ் அணி, நெய்மரின் முதல் தொழில்முறை கால்பந்து கிளப் என்பதால், அவரின் கம்பேக் ஆட்டத்துக்கு ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்பில் இருந்தனர். ஆனால், அணி தொடர்ந்து மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் நிலையில், வாஸ்கோ அணிக்கு எதிராக நடைபெற்ற இந்தப் போட்டியும் விரக்தியிலேயே முடிந்தது.
இந்த சீசனில் 19 ஆட்டங்களில் 10 தோல்விகளை சந்தித்துள்ள சாண்டோஸ் அணி, தற்போது புள்ளிப் பட்டியலில் 15வது இடத்தில் பரிதாபமாக உள்ளது. வாஸ்கோ அணியிடம் 6 கோல் வித்தியாசத்தில் அடியோடு சரிந்ததும், ஏமாற்றமடைந்த ரசிகர்கள் மைதானத்தை பாதியிலேயே விட்டு வெளியேறினர். பலர் வீரர்களை ‘shameless’ என விமர்சித்ததுடன், வாஸ்கோ அணிக்கும் ஆதரவை வெளிப்படுத்தினர்.
போட்டித் தோல்விக்கு பிறகு, மைதானத்திலேயே அமர்ந்து கதறி அழுத நெய்மரைக் கூட்டாளி வீரர்களும் பயிற்சியாளரும் சமாதானப்படுத்த முயன்றனர். எனினும், டக்அவுட் செல்லும் வரை அவர் கண்ணீர் விட்டுக்கொண்டே வெளியேறினார்.
இந்த அதிர்ச்சி தோல்விக்குப் பிறகு, சாண்டோஸ் அணியின் பயிற்சியாளர் பணிநீக்கம் செய்யப்பட்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது. ஆனால் அதற்கு எதிர்ப்பு தெரிவித்த நெய்மர், அணியின் வீரர்களே சரியாக செயல்படவில்லை என்பதே காரணம் என்று குற்றஞ்சாட்டியுள்ளார்.