தமிழ்நாட்டில் ஒகேனக்கல் பகுதி 2, திருவண்ணாமலை கூட்டு குடிநீர் திட்டம் ஆகியவை திட்ட அறிக்கையில் உள்ளன, அவை நிறைவேற்றப்படும் பொழுது தமிழ்நாட்டில் 100% மக்களுக்கு குடிநீர் வழங்கப்பட்டிருக்கும்,
மயிலாடுதுறை மாவட்டம், குத்தாலம் பேரூராட்சியில், ரூ.2.96 கோடி மதிப்பீட்டில், புதிய பேருந்து நிலையம் கட்டுமானப் பணிகளுக்கு, அடிக்கல் நாட்டும் நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்தார்.
மயிலாடுதுறை மாவட்டம், குத்தாலம் பேரூராட்சியில், கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டுத் திட்டத்தின் (2025-2026) கீழ் ரூ.2.96 கோடி மதிப்பீட்டில் நவீன வசதிகளுடன் கூடிய, முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் மு.கருணாநிதி புதிய பேருந்து நிலையம் கட்டுமானப் பணிகளுக்கு, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அமைச்சர் திரு.கே.என்.நேரு அடிக்கல் நாட்டினார். இந்நிகழ்ச்சியில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் திரு.சிவ.வீ.மெய்யநாதன் , சட்டமன்ற உறுப்பினர்கள் திரு.நிவேதா எம்.முருகன் , எம்.பன்னீர்செல்வம் திரு.எஸ்.ராஜகுமார் ஆகியோர் பங்கேற்றனர்.
புதிய பேருந்து நிலைய கட்டுமானப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டியபின் , அமைச்சர் நேரு நிகழ்ச்சியில் பேசும் பொழுது, தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் வழிகாட்டுதலின்பேரில், இன்றைய தினம் குத்தாலம் பேரூராட்சியில், ரூ.2.96 கோடி மதிப்பீட்டில் நவீன வசதிகளுடன் கூடிய புதிய பேருந்து நிலையம் கட்டுமானப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் வழிகாட்டுதலுடன், தமிழ்நாட்டில் உள்ள 479 பேரூராட்சிகளிலும், கூட்டுக்குடிநீர் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. மேலும், 100-க்கும் மேற்பட்ட பேரூராட்சிகளில் தலா ரூ.20 கோடி மதிப்பீட்டில் அந்தந்த பேரூராட்சியிலும் ஆழ்குழாய் அமைத்து, நீர்த்தேக்கத் தொட்டி மூலம் பொதுமக்களுக்கு பாதுகாக்கப்பட்ட குடிநீர் தடையின்றி வழங்கும் திட்டத்தை செயல்படுத்தி வருகிறார்கள். தமிழ்நாட்டில் 20 -க்கும் மேற்பட்ட இடங்களில் புதிய பேருந்து நிலையம் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகிறது. மேலும், பழைய பேருந்து நிலையங்களை புதுப்பித்தல், புதிதாக மார்க்கெட் அமைத்தல், சாலை வசதிகள் ஏற்படுத்துதல், தெருவிளக்குகள் அமைத்தல் போன்ற பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
மாண்பமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், தமிழ்நாட்டிலுள்ள 479 பேரூராட்சிகளுக்கும், இவ்வாண்டு ரூ.3800 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளார்கள். தமிழ்நாட்டில் 158 நகராட்சிகளில் பேருந்து நிலையங்கள், மார்க்கெட்டுகள், கழிவறைகள் கட்டுமானப் பணிகள் ஆகியவை மேற்கொள்ளப்பட்டுள்ளன. நகராட்சி மற்றும் பேரூராட்சிகள் சேர்த்து சுமார் 17000 கி.மீ நீளத்திற்கு சாலைப் பணிகள் மேற்கொள்ளபட்டுள்ளன. முன்னாள் முதலமைச்சர் கலைஞர் அவர்களால் 1972 -இல் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் தொடங்கப்பட்டு, கடந்த 50 ஆண்டுகளில் தமிழ்நாட்டில் 4.28 கோடி மக்களுக்கு பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்கப்பட்டு வந்தது. தற்போது முதலமைச்சர் ஆட்சி காலத்தில், 1.30 கோடி மக்களுக்கு புதிதாக பாதுகாக்கப்பட்ட குடிநீர வழங்கப்பட்டுள்ளது.
மேலும் 78 இலட்சம் மக்களுக்கு பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்க பணிகள் நடைபெற்று வருகின்றன. அப்பணிகள் நிறைவுபெற்றவுடன் தமிழ்நாட்டில் 6 கோடி மக்களுக்கு பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்கப்பட்டிருக்கும். தமிழ்நாட்டில் மதுரை கோவை திருச்சி சென்னை இராமநாதபுரம் திண்டுக்கல் கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் கூட்டுக்குடிநீர் திட்டம் செயலபடுத்தப்பட்டு வருகிறது. ஒகேனக்கல் பகுதி 2, திருவண்ணாமலை கூட்டு குடிநீர் திட்டம் ஆகியவற்றிற்கு திட்ட அறிக்கை பரிசீலனையில் உள்ளது அந்த திட்டங்களும் நிறைவேற்றப்பட்டால் தமிழ்நாட்டில் 100 சதவீதம் கூட்டு குடிநீர் திட்டம் செயல்படுத்தப்பட்டுவிடும். இத்துறையில் ஆண்டுக்கு ரூ.25,000 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு அதில் ரூ.17,000 கோடி வளர்ச்சி திட்டங்களுக்காக செயல்படுத்தப்படுகிறது. அதுபோக நபார்டு மற்றும் ஜப்பான் வங்கிகள் மூலம் கடன் பெற்று பல்வேறு வளர்ச்சி திட்டங்கள் செயலபடுத்தப்பட்டு வருகின்றன. இன்றைய தினம் குத்தாலத்தில் புதிய பேருந்து நிலையம் கட்டுமான பணிகளுக்காக அடிக்கல் நாட்டுவதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன். குத்தாலம் பேருராட்சி;க்குட்பட்ட பகுதிகளில் சாலை பணிகள், பள்ளி மேம்பாடு, நவீன எரிவாயு தகனமேடை, புதிய வணிகவளாகங்கள் கட்டுதல், புதிய பாலம் கட்டுதல், குளங்கள் பராமரிப்பு, நாய் கருத்தடை மையம் கட்டுதல் என ரூ.36 கோடியே 18 இலட்சத்து 85 ஆயிரம் மதிப்பீட்டில் வளர்ச்சி திட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
தமிழ்நாட்டில் நகராட்சி மற்றும் பேரூராட்ச்சிகள் துறைகள் மூலம் ஆண்டுக்கு 1 இலட்சம் வீடுகள் கட்டப்படுகின்றன. ஒருங்கிணைந்த உள்ளாட்சி துறைக்கு ஆண்டுக்கு 51 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கீடு செய்வதுடன், சட்ட மன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்களின் கோரிக்கைகளை உடனடியாக முதலமைச்சர் அவர்கள் நிறைவேற்றி தருகிறார்கள்.
இன்று அடிக்கல் நாட்டப்பட்டுள்ள குத்தாலம் பேருந்துநிலைய கட்டுமான பணிகள் விரைவில் முடிக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்படும் என அமைச்சர் நேரு கூறினார்.
